ஏழாம்-திருமுறை

021 நொந்தா ஒண்சுடரே நுனையே

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : கச்சி மேற்றளி (காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

 

நொந்தா ஒண்சுடரே

  நுனையே நினைந்திருந்தேன்

வந்தாய் போயறியாய்

  மனமே புகுந்துநின்ற

சிந்தாய் எந்தைபிரான்

  திருமேற் றளியுறையும்

எந்தாய் உன்னையல்லால்

  இனியேத்த மாட்டேனே.  1 

 

 

ஆட்டான் பட்டமையால்

  அடியார்க்குத் தொண்டுபட்டுக்

கேட்டேன் கேட்பதெல்லாம்

  பிறவாமை கேட்டொழிந்தேன்

சேட்டார் மாளிகைசூழ்

  திருமேற் றளியுறையும்

மாட்டே உன்னையல்லால்

  மகிழ்ந்தேத்த மாட்டேனே.  2 

 

 

மோறாந் தோரொருகால்

  நினையா திருந்தாலும்

வேறா வந்தென்னுள்ளம்

  புகவல்ல மெய்ப்பொருளே

சேறார் தண்கழனித்

  திருமேற் றளியுறையும்

ஏறே உன்னையல்லால்

  இனியேத்த மாட்டேனே.  3 

 

 

உற்றார் சுற்றமெனும்

  அதுவிட்டு நுன்னடைந்தேன்

எற்றால் என்குறைவென்

  இடரைத் துறந்தொழிந்தேன்

செற்றாய் மும்மதிலுந்

  திருமேற் றளியுறையும்

பற்றே நுன்னையல்லால்

  பணிந்தேத்த மாட்டேனே.  4 

 

 

எம்மான் எம்மனையென்

  றவரிட் டிறந்தொழிந்தார்

மெய்ம்மா லாயினதீர்த்

  தருள்செய்யும் மெய்ப்பொருளே

கைம்மா வீருரியாய்

  கனமேற் றளியுறையும்

பெம்மான் உன்னையல்லால்

  பெரிதேத்த மாட்டேனே.  5 

 

 

நானேல் உன்னடியே

  நினைந்தேன் நினைதலுமே

ஊனேர் இவ்வுடலம்

  புகுந்தாயென் ஒண்சுடரே

தேனே இன்னமுதே

  திருமேற் றளியுறையுங்

கோனே உன்னையல்லாற்

  குளிர்ந்தேத்த மாட்டேனே.  6 

 

 

கையார் வெஞ்சிலைநா

  ணதன்மேற் சரங்கோத்தே

எய்தாய் மும்மதிலும்

  எரியுண்ண எம்பெருமான்

செய்யார் பைங்கமலத்

  திருமேற் றளியுறையும்

ஐயா உன்னையல்லால்

  அறிந்தேத்த மாட்டேனே.  7 

 

 

விரையார் கொன்றையினாய்

  விமலாஇனி உன்னையல்லால்

உரையேன் நாவதனால்

  உடலில்லுயிர் உள்ளளவும்

திரையார் தண்கழனித்

  திருமேற் றளியுறையும்

அரையா உன்னையல்லால்

  அறிந்தேத்த மாட்டேனே.  8 

 

 

நிலையாய் நின்னடியே

  நினைந்தேன் நினைதலுமே

தலைவா நின்னினையப்

  பணித்தாய் சலமொழிந்தேன்

சிலையார் மாமதில்சூழ்

  திருமேற் றளியுறையும்

மலையே உன்னையல்லால்

  மகிழ்ந்தேத்த மாட்டேனே.  9 

 

 

பாரூர் பல்லவனூர்

  மதிற்காஞ்சி மாநகர்வாய்ச்

சீரூ ரும்புறவிற்

  றிருமேற் றளிச்சிவனை

ஆரூ ரன்னடியான்

  அடித்தொண்டன் ஆரூரன்சொன்ன

சீரூர் பாடல்வல்லார்

  சிவலோகஞ் சேர்வாரே.  10 

திருச்சிற்றம்பலம்

மேலும்

இந்திரன் முடி தகர்த்தல்
View Details
பாம்பாட்டிச் சித்தர்
View Details
மாயக் குதிரைகள் விற்றல்
View Details