ஏழாம்-திருமுறை

020 நீள நினைந்தடி யேனுமை

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : கோளிலி

திருச்சிற்றம்பலம்

 

நீள நினைந்தடி யேனுமை

  நித்தலுங் கைதொழுவேன்

வாளன கண்மட வாளவள்

  வாடி வருந்தாமே

கோளிலி எம்பெரு மான்குண்டை

  யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

ஆளிலை எம்பெரு மானவை

  அட்டித் தரப்பணியே.  1 

 

 

வண்டம ருங்குழ லாளுமை

  நங்கையோர் பங்குடையாய்

விண்டவர் தம்புர மூன்றெரி

  செய்தவெம் வேதியனே

தெண்டிரை நீர்வயல் சூழ்திருக்

  கோளிலி எம்பெருமான்

அண்டம தாயவ னேயவை

  அட்டித் தரப்பணியே.  2 

 

 

பாதியோர் பெண்ணைவைத் தாய்பட

  ருஞ்சடைக் கங்கைவைத்தாய்

மாதர்நல் லார்வருத் தம்மது

  நீயும் அறிதியன்றே

கோதில் பொழில்புடை சூழ்குண்டை

  யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

ஆதியே அற்புத னேயவை

  அட்டித் தரப்பணியே.  3 

 

 

சொல்லுவ தென்னுனை நான்தொண்டை

  வாயுமை நங்கையைநீ

புல்கி இடத்தில்வைத் தாய்க்கொரு

  பூசல்செய் தாருளரோ

கொல்லை வளம்புற விற்குண்டை

  யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

அல்லல் களைந்தடி யேற்கவை

  அட்டித் தரப்பணியே.  4 

 

 

முல்லை முறுவல் உமையொரு

  பங்குடை முக்கணனே

பல்லயர் வெண்டலை யிற்பலி

  கொண்டுழல் பாசுபதா

கொல்லை வளம்புற விற்றிருக்

  கோளிலி எம்பெருமான்

அல்லல் களைந்தடி யேற்கவை

  அட்டித் தரப்பணியே.  5 

 

 

குரவம ருங்குழ லாளுமை

  நங்கையோர் பங்குடையாய்

பரவை பசிவருத் தம்மது

  நீயும் அறிதியன்றே

குரவம ரும்பொழில் சூழ்குண்டை

  யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

அரவ மசைத்தவ னேயவை

  அட்டித் தரப்பணியே.  6 

 

 

எம்பெரு மானுனை யேநினைந்

  தேத்துவன் எப்பொழுதும்

வம்பம ருங்குழ லாளொரு

  பாகம மர்ந்தவனே

செம்பொனின் மாளிகை சூழ்திருக்

  கோளிலி எம்பெருமான்

அன்பது வாயடி யேற்கவை

  அட்டித் தரப்பணியே.  7 

 

 

அரக்கன் முடிகரங் கள்அடர்த்

  திட்டவெம் மாதிபிரான்

பரக்கும் அரவல்கு லாள்பர

  வையவள் வாடுகின்றாள்

குரக்கினங் கள்குதி கொள்குண்டை

  யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

இரக்கம தாயடி யேற்கவை

  அட்டித் தரப்பணியே.  8 

 

 

பண்டைய மால்பிர மன்பறந்

  தும்மிடந் தும்மயர்ந்துங்

கண்டில ராயவர் கள்கழல்

  காண்பரி தாயபிரான்

தெண்டிரை நீர்வயல் சூழ்திருக்

  கோளிலி எம்பெருமான்

அண்டம தாயவ னேயவை

  அட்டித் தரப்பணியே.  9 

 

 

கொல்லை வளம்புற விற்றிருக்

  கோளிலி மேயவனை

நல்லவர் தாம்பர வுந்திரு

  நாவல வூரனவன்

நெல்லிட ஆட்கள்வேண் டிநினைந்

  தேத்திய பத்தும்வல்லார்

அல்லல் களைந்துல கின்அண்டர்

  வானுல காள்பவரே.  10 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

படையுடன் சோழனை மடுவில் வீழ்த்தல்
View Details
கணநாத நாயனார்
View Details
பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்குதல்
View Details