ஏழாம்-திருமுறை

015 பூணாண் ஆவதோர்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : நாட்டியத்தான்குடி

திருச்சிற்றம்பலம்

 

பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன்

  புறங்காட் டாடல்கண் டிகழேன்

பேணீ ராகிலும் பெருமையை உணர்வேன்

  பிறவே னாகிலும் மறவேன்

காணீ ராகிலுங் காண்பனென் மனத்தால்

  கருதீ ராகிலுங் கருதி

நானே லும்மடி பாடுதல் ஒழியேன்

  நாட்டியத் தான்குடி நம்பீ.  1 

 

 

கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட்

  டெல்லியில் ஆடலைக் கவர்வன்

துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை

    சொல்லாய் திப்பிய மூர்த்தி

வைச்சே இடர்களைக் களைந்திட வல்ல

  மணியே மாணிக்க வண்ணா

நச்சேன் ஒருவரை நானுமை அல்லால்

  நாட்டியத் தான்குடி நம்பீ.  2 

 

 

அஞ்சா தேயஉமக் காட்செய வல்லேன்

  யாதினுக் காசைப் படுகேன்

பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை

  பங்கா எம்பர மேட்டீ

மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த

  மணியே மாணிக்க வண்ணா

நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீ

  நாட்டியத் தான்குடி நம்பீ.  3 

 

 

கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை

  கல்லா தேபல கற்றேன்

நில்லே னல்லேன் நின்வழி நின்றார்

  தம்முடை நீதியை நினைய

வல்லே னல்லேன் பொன்னடி பரவ

  மாட்டேன் மறுமையை நினைய

நல்லே னல்லேன் நானுமக் கல்லால்

  நாட்டியத் தான்குடி நம்பீ.  4 

 

 

மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக்

  கருதா தார்தமைக் கருதேன்

ஒட்டீ ராகிலும் ஒட்டுவன் அடியேன்

  உம்மடி யடைந்தவர்க் கடிமைப்

பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன்

  பாடியும் நாடியும் அறிய

நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன்

  நாட்டியத் தான்குடி நம்பீ.  5 

 

 

படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம்

  படுத்தா யென்றல்லல் பறையேன்

குடப்பாச் சிலுறை கோக்குளிர் வானே

  கோனே கூற்றுதைத் தானே

மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடும்

  மறையோ தீமங்கை பங்கா

நடப்பீ ராகிலும் நடப்பனும் மடிக்கே

  நாட்டியத் தான்குடி நம்பீ.  6 

 

 

ஐவாய் அரவினை மதியுடன் வைத்த

  அழகா அமரர்கள் தலைவா

எய்வான் வைத்ததோர் இலக்கினை அணைதர

  நினைந்தேன் உள்ளமுள் ளளவும்

உய்வான் எண்ணிவந் தும்மடி அடைந்தேன்

  உகவீ ராகிலும் உகப்பன்

நைவா னன்றுமக் காட்பட்ட தடியேன்

  நாட்டியத் தான்குடி நம்பீ.  7 

 

 

கலியேன் மானுட வாழ்க்கைஒன் றாகக்

  கருதிடிற் கண்கணீர் பில்கும்

பலிதேர்ந் துண்பதோர் பண்புகண் டிகழேன்

  பசுவே ஏறிலும் பழியேன்

வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன்

  மாட்டேன் மறுமையை நினையேன்

நலியேன் ஒருவரை நானுமை அல்லால்

  நாட்டியத் தான்குடி நம்பீ.  8 

 

 

குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள்

  கொண்டா ராகிலுங் கொள்ளக்

கண்டா லுங்கரு தேன்எரு தேறுங்

  கண்ணா நின்னல தறியேன்

தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு

  தொழுதேன் என்வினை போக

நண்டா டும்வயல் தண்டலை வேலி

  நாட்டியத் தான்குடி நம்பீ.  9 

 

 

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற

  கொடிறன் கோட்புலி சென்னி

நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி

  நம்பியை நாளும் மறவாச்

சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்

  திருவா ரூரன் உரைத்த

பாடீராகிலும் பாடுமின் றொண்டீர்

  பாடநும் பாவம்பற் றறுமே.  10 

 

திருச்சிற்றம்பலம்