ஆறாம்-திருமுறை

049 சந்திரனுந் தண்புனலுஞ்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர் 

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : கோகரணம்

திருச்சிற்றம்பலம்

 

சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண்

தாழ்சடையான்காண் சார்ந்தார்க் கமுதா னான்காண்

அந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண்

அவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்

பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண்

பலபலவும் பாணி பயில்கின் றான்காண்

மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண்

மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.  1 

 

 

தந்தவத்தன் தந்தலையைத் தாங்கி னான்காண்

சாரணன்காண் சார்ந்தார்க்கின் னமுதா னான்காண்

கெந்தத்தன் காண்கெடில வீரட் டன்காண்

கேடிலிகாண் கெடுப்பார்மற் றில்லா தான்காண்

வெந்தொத்த நீறுமெய் பூசி னான்காண்

வீரன்காண் வியன்கயிலை மேவி னான்காண்

வந்தொத்த நெடுமாற்கும் அறிவொ ணான்காண்

மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.  2 

 

 

தன்னுருவம் யாவருக்குந் தாக்கா தான்காண்

தாழ்சடையெம் பெருமான்காண் தக்கார்க் குள்ள

பொன்னுருவச் சோதிபுன லாடி னான்காண்

புராணன்காண் பூதங்க ளாயி னான்காண்

மின்னுருவ நுண்ணிடையாள் பாகத் தான்காண்

வேழத்தி னுரிவெருவப் போர்த்தான் தான்காண்

மன்னுருவாய் மாமறைக ளோதி னான்காண்

மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.  3 

 

 

ஆறேறு செஞ்சடையெம் ஆரூ ரன்காண்

அன்பன்காண் அணிபழனம் மேயான் றான்காண்

நீறேறி நிழல்திகழும் மேனி யான்காண்

நிருபன்காண் நிகரொன்று மில்லா தான்காண்

கூறேறு கொடுமழுவாட் படையி னான்காண்

கொக்கரையன் காண்குழுநற் பூதத் தான்காண்

மாறாய மதில்மூன்றும் மாய்வித் தான்காண்

மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.  4 

 

 

சென்றச் சிலைவாங்கிச் சேர்வித் தான்காண்

தீயம்பன் காண்திரி புரங்கள் மூன்றும்

பொன்றப் பொடியாக நோக்கி னான்காண்

பூதன்காண் பூதப் படையாளிகாண்

அன்றப் பொழுதே அருள்செய் தான்காண்

அனலாடி காண்அடியார்க் கமுதா னான்காண்

மன்றல் மணங்கமழும் வார்சடை யான்காண்

மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.  5 

 

 

பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண்

பேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண்

கறையோடு மணிமிடற்றுக் காபாலி காண்

கட்டங்கன் காண்கையிற் கபால மேந்திப்

பறையோடு பல்கீதம் பாடி னான்காண்

ஆடினான் காண்பாணி யாக நின்று

மறையோடு மாகீதங் கேட்டான் றான்காண்

மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.  6 

 

 

மின்னளந்த மேல்முகட்டின் மேலுற் றான்காண்

விண்ணவர்தம் பெருமான்காண் மேவி லெங்கும்

முன்னளந்த மூவர்க்கும் முதலா னான்காண்

மூவிலைவேற் சூலத்தெங் கோலத் தான்காண்

எண்ணளந்தென் சிந்தையே மேவி னான்காண்

ஏவலன்காண் இமையோர்க ளேத்த நின்று

மண்ணளந்த மாலறியா மாயத் தான்காண்

மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.  7 

 

 

பின்னு சடைமேற்பிறை சூடி னான்காண்

பேரருளன் காண்பிறப்பொன் றில்லா தான்காண்

முன்னி யுலகுக்கு முன்னா னான்காண்

மூவெயிலுஞ் செற்றுகந்த முதல்வன் றான்காண்

இன்னவுரு வென்றறிவொண் ணாதான் றான்காண்

ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்

மன்னும் மடந்தையோர் பாகத் தான்காண்

மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.  8 

 

 

வெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழ லன்காண்

வீரன்காண் வீரட்டம் மேவி னான்காண்

பொட்ட அநங்கனையும் நோக்கி னான்காண்

பூதன்காண் பூதப் படையி னான்காண்

கட்டக் கடுவினைகள் காத்தாள் வான்காண்

கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்

வட்ட மதிப்பாகஞ் சூடி னான்காண்

மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.  9 

 

 

கையாற் கயிலை யெடுத்தான் தன்னைக்

கால்விரலால் தோள்நெரிய வூன்றி னான்காண்

மெய்யின் நரம்பிசையாற் கேட்பித் தாற்கு

மீண்டே யவற்கருள்கள் நல்கி னான்காண்

பொய்யர் மனத்துப் புறம்பா வான்காண்

போர்ப்படையான் காண்பொருவா ரில்லா தான்காண்

மைகொள் மணிமிடற்று வார்சடை யான்காண்

மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.  10 

 

திருச்சிற்றம்பலம்