ஆறாம்-திருமுறை

025 உயிரா வணமிருந் துற்று

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : ஆரூர்

திருச்சிற்றம்பலம்

 

உயிரா வணமிருந் துற்று நோக்கி

உள்ளக் கிழியி னுரு வெழுதி

உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்

உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி

அயிரா வணமேறா தானே றேறி

அமரர்நா டாளாதே ஆரூ ராண்ட

அயிரா வணமேயென் னம்மா னேநின் 

அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.  1 

 

 

எழுது கொடியிடையார் ஏழை மென்றோள் 

இளையார்கள் நம்மை இகழா முன்னம்

பழுது படநினையேல் பாவி நெஞ்சே

பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ 

முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி

முடியா லுறவணங்கி முற்றம் பற்றி

அழுது திருவடிக்கே பூசை செய்ய 

இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.  2 

 

 

தேரூரார் மாவூரார் திங்க ளூரார் 

திகழ்புன் சடைமுடிமேற் றிங்கள் சூடிக்

காரூரா நின்ற கழனிச் சாயற் 

கண்ணார்ந்த நெடுமாடங் கலந்து தோன்றும்

ஓரூரா உலகெலா மொப்பக் கூடி

உமையாள் மணவாளா என்று வாழ்த்தி

ஆரூரா ஆரூரா என்கின் றார்கள்

அமரர்கள்தம் பெருமானே எங்குற் றாயே.  3 

 

 

கோவணமோ தோலோ உடை யாவது

கொல்லேறோ வேழமோ ஊர்வ துதான்

பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான் 

பொருந்தாதார் வாழ்க்கை திருந்தா மையோ

தீவணத்த செஞ்சடைமேற் றிங்கள் சூடித்

திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்

ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்

அறியேன்மற் றூராமா றாரூர் தானே.  4 

 

 

ஏந்து மழுவாளர் இன்னம் பரார்

எரிபவள வண்ணர் குடமூக் கிலார்

வாய்ந்த வளைக்கையாள் பாக மாக 

வார்சடையார் வந்து வலஞ்சு ழியார்

போந்தா ரடிகள் புறம்ப யத்தே

புகலூர்க்கே போயினார் போரே றேறி

ஆய்ந்தே யிருப்பார்போய் ஆரூர் புக்கார்

அண்ணலார் செய்கின்ற கண்மா யமே.  5 

 

 

கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை 

கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி

உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால் 

வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்

மருவாகி நின்னடியே மறவே னம்மான்

மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணந்

திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்

செம்பொனே கம்பனே திகைத்திட் டேனே.  6 

 

 

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் 

மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை

தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே.  7 

 

 

ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா 

அவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னைப்

பாடுவார் தும்புருவும் நார தாதி

பரவுவார் அமரர்களு மமரர் கோனுந்

தேடுவார் திருமாலும் நான்மு கனுந்

தீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளுங்

கூடுமே நாயடியேன் செய்குற் றேவல்

குறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே.  8 

 

 

நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்

நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி

ஓரூரு மொழியாமே ஒற்றித் தெங்கும் 

உலகமெலாந் திரிதந்து நின்னைக் காண்பான்

தேரூரும் நெடுவீதி பற்றி நின்று

திருமாலும் நான்முகனுந் தேர்ந்துங் காணா

தாரூரா ஆரூரா என்கின் றார்கள்

அமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே.  9 

 

 

நல்லூரே நன்றாக நட்ட மிட்டு

நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்

பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே

பலர்காணத் தலையாலங் காட்டி னூடே

இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி

இராப்பட்டீச் சரங்கடந்து மணற்கால் புக்கு

எல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காண

இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.  10 

 

 

கருத்துத்திக் கதநாகங் கையி லேந்திக்

கருவரைபோற் களியானை கதறக் கையால்

உரித்தெடுத்துச் சிவந்ததன்றோல் பொருந்த மூடி

உமையவளை அச்சுறுத்தும் ஒளிகொள் மேனித்

திருத்துருத்தி திருப்பழனந் திருநெய்த்தானம் 

திருவையா றிடங்கொண்ட செல்வர் இந்நாள்

அரிப்பெருத்த வெள்ளேற்றை அடர ஏறி

அப்பனார் இப்பருவ மாரூ ராரே.  11 

 

திருச்சிற்றம்பலம்