ஆறாம்-திருமுறை

020 ஆதிக்கண் ணான்முகத்தி லொன்று

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : நள்ளாறு

திருச்சிற்றம்பலம்

 

ஆதிக்கண் ணான்முகத்தி லொன்று சென்று 

அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளாற்

சேதித்த திருவடியைச் செல்ல நல்ல 

சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை

மாதிமைய மாதோர்கூ றாயி னானை

மாமலர்மே லயனோடு மாலுங் காணா

நாதியை நம்பியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.  1 

 

 

படையானைப் பாசுபத வேடத் தானைப்

பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம்

அடையாமைக் காப்பானை அடியார் தங்கள் 

அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச்

சடையானைச் சந்திரனைத் தரித்தான் றன்னைச்

சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்

நடையானை நம்பியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.  2 

 

 

படவரவ மொன்றுகொண் டரையி லார்த்த 

பராபரனைப் பைஞ்ஞீலி மேவி னானை

அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை 

அமுதாக உண்டானை ஆதி யானை

மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை

மாமணியை மாணிக்காய்க் காலன் றன்னை

நடலரவஞ் செய்தானை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.  3 

 

 

கட்டங்க மொன்றுதங் கையி லேந்திக்

கங்கணமுங் காதில்விடு தோடு மிட்டுச்

சுட்டங்கங் கொண்டு துதையப் பூசிச்

சுந்தரனாய்ச் சூலங்கை யேந்தி னானைப்

பட்டங்க மாலை நிறையச் சூடிப்

பல்கணமுந் தாமும் பரந்த காட்டில்

நட்டங்க மாடியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.  4 

 

 

உலர்ந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம் 

ஒருநொடியில் உழல்வானை உலப்பில் செல்வஞ்

சிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத்

திருச்சிராப் பள்ளியெஞ் சிவலோ கனைக்

கலந்தார்தம் மனத்தென்றுங் காதலானைக்

கச்சியே கம்பனைக் கமழ்பூங் கொன்றை

நலந்தாங்கு நம்பியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.  5 

 

 

குலங்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் றன்னைக்

குலவரையன் மடப்பாவை இடப்பா லானை

மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட 

மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச்

சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னுந் 

தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்

நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.  6 

 

 

பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப்

புறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை

மாவிரியக் களிறுரித்த மைந்தன் றன்னை

மறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத்

தேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ்

சிதைத்தானை உதைத்தவன்றன் சிரங்கொண் டானை

நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.  7 

 

 

சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத் 

தொல்லவுணர் புரமூன்று மெரியச் செற்ற

வில்லானை எல்லார்க்கு மேலா னானை

மெல்லியலாள் பாகனை வேதம் நான்குங்

கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானைக்

காளத்தி யானைக் கயிலை மேய

நல்லானை நம்பியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.  8 

 

 

குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக் 

குரைகழலாற் கூற்றுவனைக் குமைத்த கோனை

அன்றாக அவுணர்புர மூன்றும் வேவ 

ஆரழல்வா யோட்டி யடர்வித் தானைச்

சென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னைச்

சிவனேயெம் பெருமானென் றிருப்பார்க் கென்றும்

நன்றாகும் நம்பியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.  9 

 

 

இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க 

இராவணனை இருபதுதோள் நெரிய வூன்றி

உறவாகி இன்னிசைகேட் டிரங்கி மீண்டே

உற்றபிணி தவிர்த்தருள வல்லான் றன்னை

மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை

மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்

நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 10

 

 

திருச்சிற்றம்பலம்