ஆறாம்-திருமுறை

006 அரவணையான் சிந்தித்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : அதிகை வீரட்டானம்

திருச்சிற்றம்பலம்

 

அரவணையான் சிந்தித் தரற்றும்மடி

அருமறையான் சென்னிக் கணியாமடி

சரவணத்தான் கைதொழுது சாரும்மடி

சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி

பரவுவார் பாவம் பறைக்கும்மடி

பதினெண் கணங்களும் பாடும்மடி

திரைவிரவு தென்கெடில நாடன்னடி

திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.  1 

 

 

கொடுவினையா ரென்றுங் குறுகாவடி

குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி

படுமுழவம் பாணி பயிற்றும்மடி

பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி

கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி

கடல்வையங் காப்பான் கருதும்மடி

நெடுமதியங் கண்ணி யணிந்தானடி

நிறைகெடில வீரட்டம் நீங்காவடி.  2 

 

 

வைதெழுவார் காமம்பொய் போகாவடி

வஞ்சவலைப் பாடொன் றில்லாவடி

கைதொழுது நாமேத்திக் காணும்மடி

கணக்கு வழக்கைக் கடந்தவடி

நெய்தொழுது நாமேத்தி யாட்டும்மடி

நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி

தெய்வப் புனற்கெடில நாடன்னடி

திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.  3 

 

 

அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி

அழகெழுத லாகா அருட்சேவடி

சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி

சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி

பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி

பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி

திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி

திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.  4 

 

 

ஒருகாலத் தொன்றாகி நின்றவடி

ஊழிதோ றூழி உயர்ந்தவடி

பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்மடி

புகழ்வார் புகழ்தகைய வல்லவடி

இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி

இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி

திருவதிகைத் தென்கெடில நாடன்னடி

திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.  5 

 

 

திருமகட்குச் செந்தா மரையாமடி

சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி

பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி

புகழ்வார் புகழ்தகைய வல்லவடி

உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி

உருவென் றுணரப் படாதவடி

திருவதிகைத் தென்கெடில நாடன்னடி

திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.  6 

 

 

உரைமாலை யெல்லா முடையவடி

உரையால் உணரப் படாதவடி

வரைமாதை வாடாமை வைக்கும்மடி

வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி

அரைமாத் திரையில் லடங்கும்மடி

அகலம் அளக்கிற்பார் இல்லாவடி

கரைமாங் கலிக்கெடில நாடன்னடி

கமழ்வீரட் டானக் காபாலியடி.  7 

 

 

நறுமலராய் நாறு மலர்ச்சேவடி 

நடுவாய் உலகநா டாயவடி

செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி

தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி

மறுமதியை மாசு கழுவும்மடி

மந்திரமுந் தந்திரமு மாயவடி

செறிகெடில நாடர் பெருமானடி

திருவீரட் டானத்தெஞ் செல்வனடி.  8 

 

 

அணியனவுஞ் சேயனவு மல்லாவடி

அடியார்கட் காரமுத மாயவடி

பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி

பற்றற்றார் பற்றும் பவளவடி

மணியடி பொன்னடி மாண்பாமடி

மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி

தணிபாடு தண்கெடில நாடன்னடி

தகைசார் வீரட்டத் தலைவனடி.  9 

 

 

அந்தாம ரைப்போ தலர்ந்தவடி

அரக்கனையும் ஆற்றல் அழித்தவடி

முந்தாகி முன்னே முளைத்தவடி

முழங்கழலாய் நீண்டவெம் மூர்த்தியடி

பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி

பவளத் தடவரையே போல்வானடி

வெந்தார் சுடலைநீ றாடும்மடி

வீரட்டங் காதல் விமலனடி. 10

 

திருச்சிற்றம்பலம்