ஐந்தாம்-திருமுறை

098 நீற லைத்ததோர்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

நீற லைத்ததோர்

  மேனி நிமிர்சடை

ஆற லைக்கநின்

  றாடும் அமுதினைத்

தேற லைத்தெளி

  யைத்தெளி வாய்த்ததோர்

ஊற லைக்கண்டு

  கொண்டதெ னுள்ளமே.  1 

 

 

பொந்தை யைப்புக்கு

  நீக்கப் புகுந்திடுந்

தந்தை யைத்தழல்

  போல்வதோர் மேனியைச்

சிந்தை யைத்தெளி

  வைத்தெளி வாய்த்ததோர்

எந்தை யைக்கண்டு

  கொண்டதெ னுள்ளமே.  2 

 

 

வெள்ளத் தார்விஞ்சை

  யார்கள் விரும்பவே

வெள்ளத் தைச்சடை

  வைத்த விகிர்தனார்

கள்ளத் தைக்கழி

  யம்மன மொன்றிநின்

றுள்ளத் தில்லொளி

  யைக்கண்ட துள்ளமே.  3 

 

 

அம்மா னையமு

  தின்னமு தேயென்று

தம்மா னைத்தத்து

  வத்தடி யார்தொழுஞ்

செம்மா னநிறம்

  போல்வதோர் சிந்தையுள்

எம்மா னைக்கண்டு

  கொண்டதெ னுள்ளமே.  4 

 

 

கூறே றும்முமை

  பாகமோர் பாலராய்

ஆறே றுஞ்சடை

  மேற்பிறை சூடுவர்

பாறே றுந்தலை

  யேந்திப் பலஇலம்

ஏறேறு மெந்தையைக்

  கண்டதெ னுள்ளமே.  5 

 

 

முன்னெஞ் சம்மின்றி

  மூர்க்கராய்ச் சாகின்றார்

தன்னெஞ் சந்தமக்

  குத்தாம் இலாதவர்

வன்னெஞ் சம்மது

  நீங்குதல் வல்லீரே

என்னெஞ்சி லீசனைக்

  கண்டதெ னுள்ளமே.  6 

 

 

வென்றா னைப்புல

  னைந்துமென் தீவினை

கொன்றா னைக்குணத்

  தாலே வணங்கிட

நன்றா நன்மனம்

  வைத்திடு ஞானமாம்

ஒன்றா னைக்கண்டு

  கொண்டதெ னுள்ளமே.  7 

 

 

மருவி னைமட

  நெஞ்சம் மனம்புகுங்

குருவி னைக்குணத்

  தாலே வணங்கிடுந்

திருவி னைச்சிந்தை

  யுட்சிவ னாய்நின்ற

உருவி னைக்கண்டு

  கொண்டதெ னுள்ளமே.  8 

 

 

தேச னைத்திரு

  மால்பிர மன்செயும்

பூச னைப்புண

  ரிற்புணர் வாயதோர்

நேச னைநெஞ்சி

  னுள்நிறை வாய்நின்ற

ஈச னைக்கண்டு

  கொண்டதெ னுள்ளமே.  9 

 

 

வெறுத்தா னைம்புல

  னும்பிர மன்றலை

அறுத்தா னையரக்

  கன்கயி லாயத்தைக்

கறுத்தா னைக்கா

  லினில்விர லொன்றினால்

ஒறுத்தா னைக்கண்டு

  கொண்டதெ னுள்ளமே.  10 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

சிறப்புலி நாயனார்
View Details
கலசப்பாக்கம் மலப்பீடான் சித்தர் (பூண்டிச்சித்தர்)
View Details
காலாங்கி நாதர்
View Details