முதல்-திருமுறை

058 அரியும் நம்வினை

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : கரவீரம்

திருச்சிற்றம்பலம்

 

அரியும் நம்வினை யுள்ளன ஆசற

வரிகொள் மாமணி போற்கண்டம்

கரிய வன்திக ழுங்கர வீரத்தெம்

பெரிய வன்கழல் பேணவே.  1 

 

தங்கு மோவினை தாழ்சடை மேலவன்

திங்க ளோடுடன் சூடிய

கங்கை யான்திக ழுங்கர வீரத்தெம்

சங்க ரன்கழல் சாரவே.  2 

 

ஏதம் வந்தடை யாஇனி நல்லன

பூதம் பல்படை யாக்கிய

காத லான்திக ழுங்கர வீரத்தெம்

நாதன் பாதம் நணுகவே.  3 

 

பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட

மறையும் மாமணி போற்கண்டம்

கறைய வன்திக ழுங்கர வீரத்தெம்

இறைய வன்கழல் ஏத்தவே.  4 

 

பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்

விண்ணி னார்மதி லெய்தமுக்

கண்ணி னான்உறை யுங்கர வீரத்தைத்

நண்ணு வார்வினை நாசமே.  5 

 

நிழலி னார்மதி சூடிய நீள்சடை

அழலி னாரழ லேந்திய

கழலி னாருறை யுங்கர வீரத்தைத்

தொழவல் லார்க்கில்லை துக்கமே. 6

 

வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்

அண்டன் ஆரழல் போலொளிர்

கண்ட னாருறை யுங்கர வீரத்துத்

தொண்டர் மேல்துயர் தூரமே.  7 

 

புனலி லங்கையர் கோன்முடி பத்திறச்

சினவ லாண்மை செகுத்தவன்

கனல வன்னுறை கின்ற கரவீரம்

எனவல் லார்க்கிட ரில்லையே.  8 

 

வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்

தெள்ளத் தீத்திர ளாகிய

கள்ளத் தான்உறை யுங்கர வீரத்தை

உள்ளத் தான்வினை ஓயுமே.  9 

 

செடிஅ மண்ணொடு சீவரத் தாரவர்

கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின்2

கடிய வன்னுறை கின்ற கரவீரத்

தடிய வர்க்கில்லை யல்லலே. 10 

 

வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்

சேடன் மேற்கசி வால்தமிழ்

நாடு ஞானசம் பந்தன சொல்லிவை

பாடு வார்க்கில்லை பாவமே. 11

 

திருச்சிற்றம்பலம்