ஐந்தாம்-திருமுறை

088 பெருக லாந்தவம்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : மருகல்

திருச்சிற்றம்பலம்

 

பெருக லாந்தவம்

  பேதைமை தீரலாந்

திருக லாகிய

  சிந்தை திருத்தலாம்

பருக லாம்பர

  மாயதோ ரானந்தம்

மருக லானடி

  வாழ்த்தி வணங்கவே.  1 

 

 

பாடங் கொள்பனு

  வற்றிறங் கற்றுப்போய்

நாடங் குள்ளன

  தட்டிய நாணிலீர்

மாடஞ் சூழ்மரு

  கற்பெரு மான்றிரு

வேடங் கைதொழ

  வீடெளி தாகுமே.  2 

 

 

சினத்தி னால்வருஞ்

  செய்தொழி லாமவை

அனைத்தும் நீங்கிநின்

  றாதர வாய்மிக

மனத்தி னால்மரு

  கற்பெரு மான்றிறம்

நினைப்பி னார்க்கில்லை

  நீணில வாழ்க்கையே.  3 

 

 

ஓது பைங்கிளிக்

  கொண்பால் அமுதூட்டிப்

பாது காத்துப்

  பலபல கற்பித்து

மாது தான்மரு

  கற்பெரு மானுக்குத்

தூது சொல்ல

  விடத்தான் தொடங்குமே.  4 

 

 

இன்ன வாறென்ப

  துண்டறி யேனின்று

துன்னு கைவளை

  சோரக்கண் நீர்மல்கும்

மன்னு தென்மரு

  கற்பெரு மான்றிறம்

உன்னி யொண்கொடி

  உள்ள முருகுமே.  5 

 

 

சங்கு சோரக்

  கலையுஞ் சரியவே

மங்கை தான்மரு

  கற்பெரு மான்வரும்

அங்க வீதி

  அருகணை யாநிற்கும்

நங்கை மீரிதற்

  கென்செய்கேன் நாளுமே.  6 

 

 

காட்சி பெற்றில

  ளாகிலுங் காதலே

மீட்சி யொன்றறி

  யாது மிகுவதே

மாட்சி யார்மரு

  கற்பெரு மானுக்குத்

தாழ்ச்சி சாலவுண்

  டாகுமென் தையலே.  7 

 

 

நீடு நெஞ்சுள்

  நினைந்துகண் ணீர்மல்கும்

ஓடு மாலினோ

  டொண்கொடி மாதராள்

மாட நீண்மரு

  கற்பெரு மான்வரிற்

கூடு நீயென்று

  கூட லிழைக்குமே.  8 

 

 

கந்த வார்குழல்

  கட்டிலள் காரிகை

அந்தி மால்விடை

  யோடுமன் பாய்மிக

வந்தி டாய்மரு

  கற்பெரு மானென்று

சிந்தை செய்து

  திகைத்திடுங் காண்மினே.  9 

 

 

ஆதி மாமலை

  அன்றெடுத் தானிற்றுச்

சோதி யென்றலுந்

  தொல்லருள் செய்திடும்

ஆதி யான்மரு

  கற்பெரு மான்றிறம்

ஓதி வாழ்பவர்

  உம்பர்க்கும் உம்பரே. 10

 

திருச்சிற்றம்பலம்