ஐந்தாம்-திருமுறை

080 வானஞ் சேர்மதி

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : அன்பிலாலந்துறை

திருச்சிற்றம்பலம்

 

 

வானஞ் சேர்மதி

  சூடிய மைந்தனை

நீநெஞ் சேகெடு

  வாய்நினை கிற்கிலை

ஆனஞ் சாடியை

  அன்பிலா லந்துறைக்

கோனெஞ் செல்வனைக்

  கூறிட கிற்றியே.  1 

 

 

கார ணத்தர்

  கருத்தர் கபாலியார்

வார ணத்துரி

  போர்த்த மணாளனார்

ஆர ணப்பொருள்

  அன்பிலா லந்துறை

நார ணற்கரி

  யானொரு நம்பியே.  2 

 

 

அன்பினா னஞ்ச

  மைந்துட னாடிய

என்பின் ஆனை

  யுரித்துக் களைந்தவன்

அன்பி லானையம்

  மானையள் ளூறிய

அன்பி னால்நினைந்

  தாரறிந் தார்களே.  3 

 

 

சங்கை யுள்ளதுஞ்

  சாவது மெய்யுமை

பங்க னாரடி

  பாவியே னானுய்ய

அங்க ணனெந்தை

  அன்பிலா லந்துறைச்

செங்க ணாரடிச்

  சேரவும் வல்லனே.  4 

 

 

கொக்கி றகர்

  குளிர்மதிச் சென்னியர்

மிக்க ரக்கர்

  புரமெரி செய்தவர்

அக்க ரையினர்

  அன்பிலா லந்துறை

நக்கு ருவரும்

  நம்மை யறிவரே.  5 

 

 

வெள்ள முள்ள

  விரிசடை நந்தியைக்

கள்ள முள்ள

  மனத்தவர் காண்கிலார்

அள்ள லார்வயல்

  அன்பிலா லந்துறை

உள்ள வாறறி

  யார்சிலர் ஊமரே.  6 

 

 

பிறவி மாயப்

  பிணக்கில் அழுந்தினும்

உறவெ லாஞ்சிந்தித்

  துன்னி உகவாதே

அறவன் எம்பிரான்

  அன்பிலா லந்துறை

மறவா தேதொழு

  தேத்தி வணங்குமே.  7 

 

 

நுணங்கு நூலயன்

  மாலும் இருவரும்

பிணங்கி யெங்குந்

  திரிந்தெய்த்துங் காண்கிலா

அணங்கன் எம்பிரான்

  அன்பிலா லந்துறை

வணங்கும் நும்வினை

  மாய்ந்தறும் வண்ணமே.  8 

 

 

பொய்யெ லாமுரைக்

  குஞ்சமண் சாக்கியக்

கையன் மாருரை

  கேளா தெழுமினோ

ஐயன் எம்பிரான்

  அன்பிலா லந்துறை

மெய்யன் சேவடி

  யேத்துவார் மெய்யரே.  9 

 

 

இலங்கை வேந்தன்

  இருபது தோளிற்று

மலங்க மாமலை

  மேல்விரல் வைத்தவன்

அலங்கல் எம்பிரான்

  அன்பிலா லந்துறை

வலங்கொள் வாரைவா

  னோர்வலங் கொள்வரே. 10

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

சமணர் ஏவிய யானை வதம்
View Details
திருவல்லம் பாம்பணையான் சித்தர்
View Details
தாயுமானவர்
View Details