ஐந்தாம்-திருமுறை

077 பூரி யாவரும் புண்ணியம்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : சேறை

திருச்சிற்றம்பலம்

 

 

பூரி யாவரும்

  புண்ணியம் பொய்கெடுங்

கூரி தாய

  அறிவுகை கூடிடுஞ்

சீரி யார்பயில்

  சேறையுட் செந்நெறி

நாரி பாகன்றன்

  நாமம் நவிலவே.  1 

 

 

என்ன மாதவஞ்

  செய்தனை நெஞ்சமே

மின்னு வார்சடை

  வேதவி ழுப்பொருள்

செந்நெ லார்வயல்

  சேறையுட் செந்நெறி

மன்னு சோதிநம்

  பால்வந்து வைகவே.  2 

 

 

பிறப்பு மூப்புப்

  பெரும்பசி வான்பிணி

இறப்பு நீங்கியிங்

  கின்பம்வந் தெய்திடுஞ்

சிறப்பர் சேறையுட்

  செந்நெறி யான்கழல்

மறப்ப தின்றி

  மனத்தினுள் வைக்கவே.  3 

 

 

மாடு தேடி

  மயக்கினில் வீழ்ந்துநீர்

ஓடி யெய்த்தும்

  பயனிலை ஊமர்காள்

சேடர் வாழ்சேறைச்

  செந்நெறி மேவிய

ஆட லான்றன்

  அடியடைந் துய்ம்மினே.  4 

 

 

எண்ணி நாளும்

  எரியயிற் கூற்றுவன்

துண்ணென் றோன்றிற்

  றுரக்கும் வழிகண்டேன்

திண்ணன் சேறைத்

  திருச்செந் நெறியுறை

அண்ண லாருளர்

  அஞ்சுவ தென்னுக்கே.  5 

 

 

தப்பில் வானந்

  தரணிகம் பிக்கிலென்

ஒப்பில் வேந்தர்

  ஒருங்குடன் சீறிலென்

செப்ப மாஞ்சேறைச்

  செந்நெறி மேவிய

அப்ப னாருளர்

  அஞ்சுவ தென்னுக்கே.  6 

 

 

வைத்த மாடும்

  மடந்தைநல் லார்களும்

ஒத்தொவ் வாதவுற்

  றார்களு மென்செய்வார்

சித்தர் சேறைத்

  திருச்செந் நெறியுறை

அத்தர் தாமுளர்

  அஞ்சுவ தென்னுக்கே.  7 

 

 

குலங்க ளென்செய்வ

  குற்றங்க ளென்செய்வ

துலங்கி நீநின்று

  சோர்ந்திடல் நெஞ்சமே

இலங்கு சேறையிற்

  செந்நெறி மேவிய

அலங்க னாருளர்

  அஞ்சுவ தென்னுக்கே.  8 

 

 

பழகி னால்வரும்

  பண்டுள சுற்றமும்

விழவி டாவிடில்

  வேண்டிய எய்தொணா

திகழ்கொள் சேறையிற்

  செந்நெறி மேவிய

அழக னாருளர்

  அஞ்சுவ தென்னுக்கே.  9 

 

 

பொருந்து நீண்மலை

  யைப்பிடித் தேந்தினான்

வருந்த வூன்றி

  மலரடி வாங்கினான்

திருந்து சேறையிற்

  செந்நெறி மேவியங்

கிருந்த சோதியென்

  பார்க்கிட ரில்லையே. 10

 

திருச்சிற்றம்பலம்