ஐந்தாம்-திருமுறை

070 கண்ட பேச்சினிற்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : கொண்டீச்சரம்

திருச்சிற்றம்பலம்

 

கண்ட பேச்சினிற்

  காளையர் தங்கள்பால்

மண்டி யேச்சுணு

  மாதரைச் சேராதே

சண்டி யீச்சுர

  வர்க்கருள் செய்தவக்

கொண்டி யீச்சுர

  வன்கழல் கூறுமே.  1 

 

 

சுற்ற முந்துணை

  நன்மட வாளொடு

பெற்ற மக்களும்

  பேண லொழிந்தனர்

குற்ற மில்புகழ்க்

  கொண்டீச் சுரவனார்

பற்ற லாலொரு

  பற்றுமற் றில்லையே.  2 

 

 

மாடு தானது

  வில்லெனின் மானிடர்

பாடு தான்செல்வா

  ரில்லைபன் மாலையாற்

கூட நீர்சென்று

  கொண்டீச் சுரவனைப்

பாடு மின்பர

  லோகத் திருத்துமே.  3 

 

 

தந்தை தாயொடு

  தார மெனுந்தளைப்

பந்த மாங்கறுத்

  துப்பயில் வெய்திய

கொந்த விழ்பொழிற்

  கொண்டீச் சுரவனைச்

சிந்தை செய்ம்மின்

  அவனடி சேரவே.  4 

 

 

கேளு மின்னிள

  மையது கேடுவந்

தீளை யோடிரு

  மல்லது வெய்தன்முன்

கோள ராவணி

  கொண்டீச் சுரவனை

நாளு மேத்தித்

  தொழுமின்நன் காகுமே.  5 

 

 

வெம்பு நோயும்

  இடரும் வெறுமையும்

துன்ப முந்துய

  ரும்மெனுஞ் சூழ்வினை

கொம்ப னார்பயில்

  கொண்டீச் சுரவனை

எம்பி ரானென

  வல்லவர்க் கில்லையே.  6 

 

 

அல்ல லோடரு

  நோயில் அழுந்திநீர்

செல்லு மாநினை

  யாதே கனைகுரற்

கொல்லை யேறுடைக்

  கொண்டீச் சுரவனை

வல்ல வாறு

  தொழவினை மாயுமே.  7 

 

 

நாறு சாந்தணி

  நன்முலை மென்மொழி

மாறி லாமலை

  மங்கையொர் பாகமாக்

கூற னாருறை

  கொண்டீச் சுரநினைந்

தூறு வார்தமக்

  கூனமொன் றில்லையே.  8 

 

 

அயிலார் அம்பெரி

  மேருவில் லாகவே

எயிலா ரும்பொடி

  யாய்விழ எய்தவன்

குயிலா ரும்பொழிற்

  கொண்டீச் சுரவனைப்

பயில்வா ரும்பெரு

  மைபெறும் பாலரே.  9 

 

 

நிலையி னார்வரை

  நின்றெடுத் தான்றனை

மலையி னாலடர்த்

  துவிறல் வாட்டினான்

குலையி னார்பொழிற்

  கொண்டீச் சுரவனைத்

தலையி னால்வணங்

  கத்தவ மாகுமே. 10

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

உக்கிர பாண்டியன் பிறப்பு
View Details
மேருவிலிருந்து பொன் பறித்தல்
View Details
அங்கம் வெட்டுதல்
View Details