ஐந்தாம்-திருமுறை

068 உள்ளா றாததோர்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : நள்ளாறு

திருச்சிற்றம்பலம்

 

உள்ளா றாததோர்

  புண்டரி கத்திரள்

தெள்ளா றாச்சிவ

  சோதித் திரளினைக்

கள்ளா றாதபொற்

  கொன்றை கமழ்சடை

நள்ளா றாவென

  நம்வினை நாசமே.  1 

 

 

ஆர ணப்பொரு

  ளாமரு ளாளனார்

வார ணத்துரி

  போர்த்த மணாளனார்

நார ணன்நண்ணி

  யேத்துநள் ளாறனார்

கார ணக்கலை

  ஞானக் கடவுளே.  2 

 

 

மேகம் பூண்டதோர்

  மேருவிற் கொண்டெயில்

சோகம் பூண்டழல்

  சோரத்தொட் டானவன்

பாகம் பூண்டமால்

  பங்கயத் தானொடு

நாகம் பூண்டுகூத்

  தாடுநள் ளாறனே.  3 

 

 

மலியுஞ் செஞ்சடை

  வாளர வம்மொடு

பொலியும் பூம்புனல்

  வைத்த புனிதனார்

நலியுங் கூற்றை

  நலிந்தநள் ளாறர்தம்

வலியுங் கண்டிறு

  மாந்து மகிழ்வனே.  4 

 

 

உறவ னாய்நிறைந்

  துள்ளங் குளிர்ப்பவன்

இறைவ னாகிநின்

  றெண்ணிறைந் தானவன்

நறவ நாறும்

  பொழிற்றிரு நள்ளாறன்

மறவ னாய்ப்பன்றிப்

  பின்சென்ற மாயமே.  5 

 

 

செக்க ரங்கழி

  செஞ்சுடர்ச் சோதியார்

நக்க ரங்கர

  வார்த்தநள் ளாறனார்

வக்க ரன்னுயிர்

  வவ்விய மாயற்குச்

சக்க ரமருள்

  செய்த சதுரரே.  6 

 

 

வஞ்ச நஞ்சிற்

  பொலிகின்ற கண்டத்தர்

விஞ்சை யிற்செல்வப்

  பாவைக்கு வேந்தனார்

வஞ்ச நெஞ்சத்

  தவர்க்கு வழிகொடார்

நஞ்ச நெஞ்சர்க்

  கருளுநள் ளாறரே.  7 

 

 

அல்ல னென்று

  மலர்க்கரு ளாயின

சொல்ல னென்றுசொல்

  லாமறைச் சோதியான்

வல்ல னென்றும்வல்

  லார்வளம் மிக்கவர்

நல்ல னென்றும்நல்

  லார்க்குநள் ளாறனே.  8 

 

 

பாம்ப ணைப்பள்ளி

  கொண்ட பரமனும்

பூம்ப ணைப்பொலி

  கின்ற புராணனுந்

தாம்ப ணிந்தளப்

  பொண்ணாத் தனித்தழல்

நாம்ப ணிந்தடி

  போற்றுநள் ளாறனே.  9 

 

 

இலங்கை மன்னன்

  இருபது தோளிற

மலங்க மால்வரை

  மேல்விரல் வைத்தவர்

நலங்கொள் நீற்றர்நள்

  ளாறரை நாடொறும்

வலங்கொள் வார்வினை

  யாயின மாயுமே. 10

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

திருநாளைப் போவார் நாயனார்
View Details
கலிக்கம்ப நாயனார்
View Details
வட ஆலவாய் தோன்றல்
View Details