ஐந்தாம்-திருமுறை

067 படையும் பூதமும்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : வாஞ்சியம்

திருச்சிற்றம்பலம்

 

படையும் பூதமும்

  பாம்பும்புல் வாயதள்

உடையுந் தாங்கிய

  உத்தம னார்க்கிடம்

புடைநி லாவிய

  பூம்பொழில் வாஞ்சியம்

அடைய வல்லவர்க்

  கல்லலொன் றில்லையே.  1 

 

 

பறப்பை யும்பசு

  வும்படுத் துப்பல

திறத்த வும்முடை

  யோர்திக ழும்பதி

கறைப்பி றைச்சடைக்

  கண்ணுதல் சேர்தரு

சிறப்பு டைத்திரு

  வாஞ்சியஞ் சேர்மினே.  2 

 

 

புற்றி லாடர

  வோடு புனல்மதி

தெற்று செஞ்சடைத்

  தேவர் பிரான்பதி

சுற்று மாடங்கள்

  சூழ்திரு வாஞ்சியம்

பற்றிப் பாடுவார்க்

  குப்பாவ மில்லையே.  3 

 

 

அங்க மாறும்

  அருமறை நான்குடன்

தங்கு வேள்வியர்

  தாம்பயி லுந்நகர்

செங்கண் மாலிட

  மார்திரு வாஞ்சியந்

தங்கு வார்நம்

  மமரர்க் கமரரே.  4 

 

 

நீறு பூசி

  நிமிர்சடை மேற்பிறை

ஆறு சூடும்

  அடிகள் உறைபதி

மாறு தானொருங்

  கும்வயல் வாஞ்சியந்

தேறி வாழ்பவர்க்

  குச்செல்வ மாகுமே.  5 

 

 

அற்றுப் பற்றின்றி

  யாரையு மில்லவர்க்

குற்ற நற்றுணை

  யாவான் உறைபதி

தெற்று மாடங்கள்

  சூழ்திரு வாஞ்சியங்

கற்றுச் சேர்பவர்க்

  குக்கருத் தாவதே.  6 

 

 

அருக்கன் அங்கி

  யமனொடு தேவர்கள்

திருத்துஞ் சேவடி

  யான்றிக ழுந்நகர்

ஒருத்தி பாக

  முகந்தவன் வாஞ்சியம்

அருத்தி யாலடை

  வார்க்கில்லை யல்லலே.  7 

 

 

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  9 

 

 

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 10

 

திருச்சிற்றம்பலம்