ஐந்தாம்-திருமுறை

061 முத்தூ ரும்புனல்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : அரிசிற்கரைப்புத்தூர்

திருச்சிற்றம்பலம்

 

முத்தூ ரும்புனல்

  மொய்யரி சிற்கரைப்

புத்தூ ரன்னடி

  போற்றியென் பாரெலாம்

பொய்த்தூ ரும்புல

  னைந்தொடு புல்கிய

மைத்தூ ரும்வினை

  மாற்றவும் வல்லரே.  1 

 

 

பிறைக்க ணிச்சடை

  யெம்பெரு மானென்று

கறைக்க ணித்தவர்

  கண்ட வணக்கத்தாய்

உறக்க ணித்துரு

  காமனத் தார்களைப்

புறக்க ணித்திடும்

  புத்தூர்ப் புனிதரே.  2 

 

 

அரிசி லின்கரை

  மேலணி யார்தரு

புரிசை நந்திருப்

  புத்தூர்ப் புனிதனைப்

பரிசொ டும்பர

  விப்பணி வார்க்கெலாந்

துரிசில் நன்னெறி

  தோன்றிடுங் காண்மினே.  3 

 

 

வேத னைமிகு

  வீணையில் மேவிய

கீத னைக்கிள

  ருந்நறுங் கொன்றையம்

போத னைப்புனல்

  சூழ்ந்தபுத் தூரனை

நாத னைந்நினைந்

  தென்மனம் நையுமே.  4 

 

 

அருப்புப் போன்முலை

  யாரல்லல் வாழ்க்கைமேல்

விருப்புச் சேர்நிலை

  விட்டுநல் லிட்டமாய்த் 

திருப்புத் தூரனைச்

  சிந்தை செயச்செயக்

கருப்புச் சாற்றிலும்

  அண்ணிக்குங் காண்மினே.  5 

 

 

பாம்பொ டுமதி

  யும்படர் புன்சடைப்

பூம்பு னலும்பொ

  திந்தபுத் தூருளான்

நாம்ப ணிந்தடி

  போற்றிட நாடொறுஞ்

சாம்பல் என்பு

  தனக்கணி யாகுமே.  6 

 

 

கனலங் கைதனி

  லேந்திவெங் காட்டிடை

அனலங் கெய்திநின்

  றாடுவர் பாடுவர்

பினலஞ் செஞ்சடை

  மேற்பிறை யுந்தரு

புனலுஞ் சூடுவர்

  போலும்புத் தூரரே.  7 

 

 

காற்றி னுங்கடி

  தாகி நடப்பதோர்

ஏற்றி னும்மிசைந்

  தேறுவர் என்பொடு

நீற்றி னையணி

  வர்நினை வாய்த்தமைப்

போற்றி யென்பவர்க்

  கன்பர்புத் தூரரே.  8 

 

 

முன்னும் முப்புரஞ்

  செற்றன ராயினும்

அன்ன மொப்பர்

  அலந்தடைந் தார்க்கெலாம்

மின்னு மொப்பர்

  விரிசடை மேனிசெம்

பொன்னு மொப்பர்புத்

  தூரெம் புனிதரே.  9 

 

 

செருத்த னால்தன

  தேர்செல வுய்த்திடுங்

கருத்த னாய்க்கயி

  லையெடுத் தானுடல்

பருத்த தோள்கெடப்

  பாதத் தொருவிரல்

பொருத்தி னார்பொழி

  லார்ந்தபுத் தூரரே. 10

 

திருச்சிற்றம்பலம்