முதல்-திருமுறை

055 ஊறி யார்தரு நஞ்சினை

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : மாற்பேறு

திருச்சிற்றம்பலம்

 

ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை

நீறு சேர்திரு மேனியர்

சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின்

மாறி லாமணி கண்டரே.  1 

 

தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை

அடைவா ராமடி கள்ளென

மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே

றுடையீ ரேயுமை யுள்கியே.  2 

 

பையா ரும்மர வங்கொடு வாட்டிய

கையா னென்று வணங்குவர்

மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற

ஐயா நின்னடி யார்களே.  3 

 

சால மாமலர் கொண்டு சரணென்று

மேலை யார்கள் விரும்புவர்

மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று

நீல மார்கண்ட நின்னையே.  4 

 

மாறி லாமணி யேயென்று வானவர்

ஏற வேமிக ஏத்துவர்

கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்

நீற னேயென்று நின்னையே.  5 

 

உரையா தாரில்லை யொன்றும்நின் தன்மையைப்

பரவா தாரில்லை நாள்களும்

திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்

றரையா னேயருள் நல்கிடே.  6 

 

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று.  7 

 

அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை

உரைகெ டுத்தவன் ஒல்கிட

வரமி குத்தஎம் மாற்பேற் றடிகளைப்

பரவி டக்கெடும் பாவமே.  8 

 

இருவர் தேவருந் தேடித் திரிந்தினி1

ஒருவராலறி வொண்ணிலன்2

மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப்

பரவு வார்வினை பாறுமே. 9

 

தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும்

நீசர் தம்முரை கொள்ளெலும்3

தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின்

ஈச னென்றெடுத் தேத்துமே. 10

 

மன்னி மாலொடு சோமன் பணிசெயும்

மன்னும் மாற்பேற் றடிகளை

மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்

பன்ன வேவினை பாறுமே. 11

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

உக்கிர பாண்டியனுக்கு வளையம்ரூபவ் வேல்ரூபவ் சண்டாயுதம் கொடுத்தல்
View Details
வரகுண பாண்டியனின் பழியை ஒழித்தல்
View Details
சேர்மன் அருணாசலம்
View Details