ஐந்தாம்-திருமுறை

058 தலையெ லாம்பறிக்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : பழையாறை வடதளி

திருச்சிற்றம்பலம்

 

தலையெ லாம்பறிக்

  குஞ்சமண் கையருள்

நிலையி னான்மறைத்

  தான்மறைக் கொண்ணுமே

அலையி னார்பொழி

  லாறை வடதளி

நிலையி னானடி

  யேநினைந் துய்ம்மினே.  1 

 

 

மூக்கி னால்முரன்

  றோதியக் குண்டிகை

தூக்கி னார்குலந்

  தூரறுத் தேதனக்

காக்கி னானணி

  யாறை வடதளி

நோக்கி னார்க்கில்லை

  யாலரு நோய்களே.  2 

 

 

குண்ட ரைக்குண

  மில்லரைக் கூறையில்

மிண்ட ரைத்துரந்

  தவிம லன்றனை

அண்ட ரைப்பழை

  யாறை வடதளிக்

கண்ட ரைத்தொழு

  துய்ந்தன கைகளே.  3 

 

 

முடைய ரைத்தலை

  முண்டிக்கும் மொட்டரை

கடைய ரைக்கடிந்

  தார்கனல் வெண்மழுப்

படைய ரைப்பழை

  யாறை வடதளி

உடைய ரைக்குளிர்ந்

  துள்குமென் உள்ளமே.  4 

 

 

ஒள்ள ரிக்கணார்

  முன்னமண் நின்றுணுங்

கள்ள ரைக்கடிந்

  தகருப் பூறலை

அள்ள லம்புன

  லாறை வடதளி

வள்ள லைப்புக

  ழத்துயர் வாடுமே.  5 

 

 

நீதி யைக்கெட

  நின்றம ணேயுணுஞ்

சாதி யைக்கெடு

  மாசெய்த சங்கரன்

ஆதி யைப்பழை

  யாறை வடதளிச்

சோதி யைத்தொழு

  வார்துயர் தீருமே.  6 

 

 

திரட்டி ரைக்க

  வளந்திணிக் குஞ்சமண்

பிரட்ட ரைப்பிரித்

  தபெரு மான்றனை

அருட்டி றத்தணி

  யாறை வடதளித்

தெருட்ட ரைத்தொழத்

  தீவினை தீருமே.  7 

 

 

ஓதி னத்தெழுத்

  தஞ்சுண ராச்சமண்

வேதி னைப்படுத்

  தானைவெங் கூற்றுதை

பாத னைப்பழை

  யாறை வடதளி

நாத னைத்தொழ

  நம்வினை நாசமே.  8 

 

 

வாயி ருந்தமி

  ழேபடித் தாளுறா

ஆயி ரஞ்சம

  ணும்மழி வாக்கினான்

பாயி ரும்புன

  லாறை வடதளி

மேய வன்னென

  வல்வினை வீடுமே.  9 

 

 

செருத்த னைச்செயுஞ்

  சேணரக் கன்னுடல்

எருத்தி றவிர

  லாலிறை யூன்றிய

அருத்த னைப்பழை

  யாறை வடதளித்

திருத்த னைத்தொழு

  வார்வினை தேயுமே. 10

திருச்சிற்றம்பலம்