ஐந்தாம்-திருமுறை

056 மைக்கொள் கண்ணுமை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : கோளிலி

திருச்சிற்றம்பலம்

 

மைக்கொள் கண்ணுமை

  பங்கினன் மான்மழுத்

தொக்க கையினன்

  செய்யதோர் சோதியன்

கொக்க மர்பொழில்

  சூழ்தரு கோளிலி

நக்க னைத்தொழ

  நம்வினை நாசமே.  1 

 

 

முத்தி னைமுத

  லாகிய மூர்த்தியை

வித்தி னைவிளை

  வாய விகிர்தனைக்

கொத்த லர்பொழில்

  சூழ்தரு கோளிலி

அத்த னைத்தொழ

  நீங்கும்நம் மல்லலே.  2 

 

 

வெண்டி ரைப்பர

  வைவிட முண்டதோர்

கண்ட னைக்கலந்

  தார்தமக் கன்பனைக்

கொண்ட லம்பொழிற்

  கோளிலி மேவிய

அண்ட னைத்தொழு

  வார்க்கல்ல லில்லையே.  3 

 

 

பலவும் வல்வினை

  பாறும் பரிசினால்

உலவுங் கங்கையுந்

  திங்களும் ஒண்சடை

குலவி னான்குளி

  ரும்பொழிற் கோளிலி

நிலவி னான்றனை

  நித்தல் நினைமினே.  4 

 

 

அல்ல லாயின

  தீரும் அழகிய

முல்லை வெண்முறு

  வல்லுமை யஞ்சவே

கொல்லை யானை

  யுரித்தவன் கோளிலிச்

செல்வன் சேவடி

  சென்று தொழுமினே.  5 

 

 

ஆவின் பால்கண்

  டளவில் அருந்தவப்

பாலன் வேண்டலுஞ்

  செல்லென்று பாற்கடல்

கூவி னான்குளி

  ரும்பொழிற் கோளிலி

மேவி னானைத்

  தொழவினை வீடுமே.  6 

 

 

சீர்த்த நன்மனை

  யாளுஞ் சிறுவரும்

ஆர்த்த சுற்றமும்

  பற்றிலை யாதலாற்

கூத்த னாருறை

  யுந்திருக் கோளிலி

ஏத்தி நீர்தொழு

  மின்னிடர் தீருமே.  7 

 

 

மால தாகி

  மயங்கும் மனிதர்காள்

காலம் வந்து

  கடைமுடி யாமுனங்

கோல வார்பொழிற்

  கோளிலி மேவிய

நீல கண்டனை

  நின்று நினைமினே.  8 

 

 

கேடு மூடிக்

  கிடந்துண்ணு நாடது

தேடி நீர்திரி

  யாதே சிவகதி

கூட லாந்திருக்

  கோளிலி ஈசனைப்

பாடு மின்னிர

  வோடு பகலுமே.  9 

 

 

மடுத்து மாமலை

  யேந்தலுற் றான்றனை

அடர்த்துப் பின்னும்

  இரங்கி யவற்கருள்

கொடுத்த வன்னுறை

  கோளிலி யேதொழ

விடுத்து நீங்கிடும்

  மேலை வினைகளே. 10

 

திருச்சிற்றம்பலம்