ஐந்தாம்-திருமுறை

052 நல்லர் நல்லதோர்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : நாகேச்சுரம்

திருச்சிற்றம்பலம்

 

நல்லர் நல்லதோர்

  நாகங்கொண் டாட்டுவர்

வல்லர் வல்வினை

  தீர்க்கும் மருந்துகள்

பல்லில் ஓடுகை

  யேந்திப் பலிதிரி

செல்வர் போல்திரு

  நாகேச் சரவரே.  1 

 

 

நாவ லம்பெருந்

  தீவினில் வாழ்பவர்

மேவி வந்து

  வணங்கி வினையொடு

பாவ மாயின

  பற்றறு வித்திடுந்

தேவர் போல்திரு

  நாகேச் சரவரே.  2 

 

 

ஓத மார்கட

  லின்விட முண்டவர்

ஆதி யார்அய

  னோடம ரர்க்கெலாம்

மாதொர் கூறர்

  மழுவல னேந்திய

நாதர் போல்திரு

  நாகேச் சரவரே.  3 

 

 

சந்தி ரன்னொடு

  சூரியர் தாமுடன்

வந்து சீர்வழி

  பாடுகள் செய்தபின்

ஐந்த லையர

  வின்பணி கொண்டருள்

மைந்தர் போல்மணி

  நாகேச் சரவரே.  4 

 

 

பண்டோர் நாளிகழ்

  வான்பழித் தக்கனார்

கொண்ட வேள்விக்

  குமண்டை யதுகெடத்

தண்ட மாவிதா

  தாவின் றலைகொண்ட

செண்டர் போல்திரு

  நாகேச் சரவரே.  5 

 

 

வம்பு பூங்குழல்

  மாது மறுகவோர்

கம்ப யானை

  யுரித்த கரத்தினர்

செம்பொ னாரித

  ழிம்மலர்ச் செஞ்சடை

நம்பர் போல்திரு

  நாகேச் சரவரே.  6 

 

 

மானை யேந்திய

  கையினர் மையறு

ஞானச் சோதியர்

  ஆதியர் நாமந்தான்

ஆன அஞ்செழுத்

  தோதவந் தண்ணிக்குந்

தேனர் போல்திரு

  நாகேச் சரவரே.  7 

 

 

கழல்கொள் காலினர்

  காலனைக் காய்ந்தவர்

தழல்கொள் மேனியர்

  சாந்தவெண் ணீறணி

அழகர் ஆல்நிழற்

  கீழற மோதிய

குழகர் போல்குளிர்

  நாகேச் சரவரே.  8 

 

 

வட்ட மாமதில்

  மூன்றுடன் வல்லரண்

சுட்ட செய்கைய

  ராகிலுஞ் சூழ்ந்தவர்

குட்ட வல்வினை

  தீர்த்துக் குளிர்விக்குஞ்

சிட்டர் போல்திரு

  நாகேச் சரவரே.  9 

 

 

தூர்த்தன் றோண்முடி

  தாளுந் தொலையவே

சேர்த்தி னார்திருப்

  பாதத் தொருவிரல்

ஆர்த்து வந்துல

  கத்தவ ராடிடுந்

தீர்த்தர் போல்திரு

  நாகேச் சரவரே. 10

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

மாபாதகம் தீர்த்தல்
View Details
திருமூல நாயனார்
View Details
ஸ்ரீ சந்தனு பீலி கிருஷ்ண மகானு பாவுலு
View Details