ஐந்தாம்-திருமுறை

040 வண்ண மும்வடி

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : கழிப்பாலை

திருச்சிற்றம்பலம்

 

வண்ண மும்வடி

  வுஞ்சென்று கண்டிலள்

எண்ணி நாமங்க

  ளேத்தி நிறைந்திலள்

கண்ணு லாம்பொழில்

  சூழ்கழிப் பாலையெம்

அண்ண லேயறி

  வானிவள் தன்மையே.  1 

 

 

மருந்து வானவர்

  உய்யநஞ் சுண்டுகந்

திருந்த வன்கழிப்

  பாலையுள் எம்பிரான்

திருந்து சேவடி

  சிந்தையுள் வைத்திவள்

பரிந்து ரைக்கிலு

  மென்சொற் பழிக்குமே.  2 

 

 

மழலை தான்வரச்

  சொற்றெரி கின்றிலள்

குழலின் நேர்மொழி

  கூறிய கேண்மினோ

அழக னேகழிப்

  பாலையெம் மண்ணலே

இகழ்வ தோயெனை

  ஏன்றுகொ ளென்னுமே.  3 

 

 

செய்ய மேனிவெண்

  ணீறணி வான்றனை

மைய லாகி

  மதிக்கில ளாரையுங்

கைகொள் வெண்மழு

  வன்கழிப் பாலையெம்

ஐய னேஅறி

  வானிவள் தன்மையே.  4 

 

 

கருத்த னைக்கழிப்

  பாலையுள் மேவிய

ஒருத்த னையுமை

  யாளொரு பங்கனை

அருத்தி யாற்சென்று

  கண்டிட வேண்டுமென்

றொருத்தி யாருளம்

  ஊசல தாடுமே.  5 

 

 

கங்கை யைச்சடை

  வைத்து மலைமகள்

நங்கை யையுட

  னேவைத்த நாதனார்

திங்கள் சூடித்

  திருக்கழிப் பாலையான்

இங்கு வந்திடு

  மென்றிறு மாக்குமே.  6 

 

 

ஐய னேஅழ

  கேஅன லேந்திய

கைய னேகறை

  சேர்தரு கண்டனே

மையு லாம்பொழில்

  சூழ்கழிப் பாலையெம்

ஐய னேவிதி

  யேஅரு ளென்னுமே.  7 

 

 

பத்தர் கட்கமு

  தாய பரத்தினை

முத்த னைமுடி

  வொன்றிலா மூர்த்தியை

அத்த னைஅணி

  யார்கழிப் பாலையெஞ்

சித்த னைச்சென்று

  சேருமா செப்புமே.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று  9 

 

 

பொன்செய் மாமுடி

  வாளரக் கன்றலை

அஞ்சு நான்குமொன்

  றும்மிறுத் தானவன்

என்செ யான்கழிப்

  பாலையு ளெம்பிரான்

துஞ்சும் போதுந்

  துணையென லாகுமே. 10

 

திருச்சிற்றம்பலம்