ஐந்தாம்-திருமுறை

028 சிந்தை வண்ணத்த

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : ஐயாறு

திருச்சிற்றம்பலம்

 

சிந்தை வண்ணத்த

  ராய்த்திறம் பாவணம்

முந்தி வண்ணத்த

  ராய்முழு நீறணி

சந்தி வண்ணத்த

  ராய்த்தழல் போல்வதோர்

அந்தி வண்ணமு

  மாவர்ஐ யாறரே.  1 

 

 

மூல வண்ணத்த

  ராய்முத லாகிய

கோல வண்ணத்த

  ராகிக் கொழுஞ்சுடர்

நீல வண்ணத்த

  ராகி நெடும்பளிங்

கால வண்ணத்த

  ராவர்ஐ யாறரே.  2 

 

 

சிந்தை வண்ணமுந்

  தீயதோர் வண்ணமும்

அந்திப் போதழ

  காகிய வண்ணமும்

பந்திக் காலனைப்

  பாய்ந்ததொர் வண்ணமும்

அந்தி வண்ணமு

  மாவர்ஐ யாறரே.  3 

 

 

இருளின் வண்ணமு

  மேழிசை வண்ணமுஞ்

சுருளின் வண்ணமுஞ்

  சோதியின் வண்ணமும்

மருளு நான்முகன்

  மாலொடு வண்ணமும்

அருளும் வண்ணமு

  மாவர்ஐ யாறரே.  4 

 

 

இழுக்கின் வண்ணங்க

  ளாகிய வெவ்வழல்

குழைக்கும் வண்ணங்க

  ளாகியுங் கூடியும்

மழைக்கண் மாமுகி

  லாகிய வண்ணமும்

அழைக்கும் வண்ணமு

  மாவர்ஐ யாறரே.  5 

 

 

இண்டை வண்ணமும்

  ஏழிசை வண்ணமுந்

தொண்டர் வண்ணமுஞ்

  சோதியின் வண்ணமுங்

கண்ட வண்ணங்க

  ளாய்க்கனல் மாமணி

அண்ட வண்ணமு

  மாவர்ஐ யாறரே.  6 

 

 

விரும்பும் வண்ணமும்

  வேதத்தின் வண்ணமுங்

கரும்பின் இன்மொழிக்

  காரிகை வண்ணமும்

விரும்பு வார்வினை

  தீர்த்திடும் வண்ணமும்

அரும்பின் வண்ணமு

  மாவர்ஐ யாறரே.  7 

 

 

ஊழி வண்ணமும்

  ஒண்சுடர் வண்ணமும்

வேழ ஈருரி

  போர்த்ததோர் வண்ணமும்

வாழித் தீயுரு

  வாகிய வண்ணமும்

ஆழி வண்ணமு

  மாவர்ஐ யாறரே.  8 

 

 

செய்த வன்றிரு

  நீறணி வண்ணமும்

எய்த நோக்கரி

   தாகிய வண்ணமுங்

கைது காட்சி

  யரியதோர் வண்ணமும்

ஐது வண்ணமு

  மாவர்ஐ யாறரே.  9 

 

 

எடுத்த வாளரக்

  கன்றிறல் வண்ணமும்

இடர்க்கள் போல்பெரி

  தாகிய வண்ணமுங்

கடுத்த கைந்நரம்

  பாலிசை வண்ணமும்

அடுத்த வண்ணமு

  மாவர்ஐ யாறரே. 10

 

திருச்சிற்றம்பலம்