ஐந்தாம்-திருமுறை

025 முந்தி மூவெயி லெய்த

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : பாசூர்

திருச்சிற்றம்பலம்

 

முந்தி மூவெயி

  லெய்த முதல்வனார்

சிந்திப் பார்வினை

  தீர்த்திடுஞ் செல்வனார்

அந்திக் கோன்றனக்

  கேயருள் செய்தவர்

பந்திச் செஞ்சடைப்

  பாசூ ரடிகளே.  1 

 

 

மடந்தை பாகம்

  மகிழ்ந்த மணாளனார்

தொடர்ந்த வல்வினை

  போக்கிடுஞ் சோதியார்

கடந்த காலனைக்

  கால்கொடு பாய்ந்தவர்

படர்ந்த நாகத்தர்

  பாசூ ரடிகளே.  2 

 

 

நாறு கொன்றையும்

  நாகமுந் திங்களும்

ஆறுஞ் செஞ்சடை

  வைத்த அழகனார்

காறு கண்டத்தர்

  கையதோர் சூலத்தர்

பாறி னோட்டினர்

  பாசூ ரடிகளே.  3 

 

 

வெற்றி யூருறை

  வேதிய ராவர்நல்

ஒற்றி யேறுகந்

  தேறு மொருவனார்

நெற்றிக் கண்ணினர்

  நீளர வந்தனைப்

பற்றி யாட்டுவர்

  பாசூ ரடிகளே.  4 

 

 

மட்ட விழ்ந்த

  மலர்நெடுங் கண்ணிபால்

இட்ட வேட்கைய

  ராகி யிருப்பவர்

துட்ட ரேலறி

  யேனிவர் சூழ்ச்சிமை

பட்ட நெற்றியர்

  பாசூ ரடிகளே.  5 

 

 

பல்லில் ஓடுகை

  யேந்திப் பகலெலாம்

எல்லி நின்றிடு

  பெய்பலி யேற்பவர்

சொல்லிப் போய்ப்புகும்

  ஊரறி யேன்சொலீர்

பல்கு நீற்றினர்

  பாசூ ரடிகளே.  6 

 

 

கட்டி விட்ட

  சடையர் கபாலியர்

எட்டி நோக்கிவந்

  தில்புகுந் தவ்வவர்

இட்ட மாவறி

  யேனிவர் செய்வன

பட்ட நெற்றியர்

  பாசூ ரடிகளே.  7 

 

 

வேத மோதிவந்

  தில்புகுந் தாரவர்

காதில் வெண்குழை

  வைத்த கபாலியார்

நீதி யொன்றறி

  யார்நிறை கொண்டனர்

பாதி வெண்பிறைப்

  பாசூ ரடிகளே.  8 

 

 

சாம்பற் பூசுவர்

  தாழ்சடை கட்டுவர்

ஓம்பல் மூதெரு

  தேறு மொருவனார்

தேம்பல் வெண்மதி

  சூடுவர் தீயதோர்

பாம்பு மாட்டுவர்

  பாசூ ரடிகளே.  9 

 

 

மாலி னோடு

  மறையவன் றானுமாய்

மேலுங் கீழும்

  அளப்பரி தாயவர்

ஆலின் நீழல்

  அறம்பகர்ந் தார்மிகப்

பால்வெண் ணீற்றினர்

  பாசூ ரடிகளே.  10 

 

 

திரியு மூவெயில்

  செங்கணை யொன்றினால்

எரிய வெய்தன

  ரேனும் இலங்கைக்கோன்

நெரிய வூன்றியிட்

  டார்விர லொன்றினாற்

பரியர் நுண்ணியர்

  பாசூ ரடிகளே. 11

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

செருத்துணை நாயனார்
View Details
வேலால் கடலைச் சிதைத்தல்
View Details
வெள்ளையானை சாபம் தீர்த்தல்
View Details