ஐந்தாம்-திருமுறை

023 கொடுங்கண் வெண்டலை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : நின்றியூர்

திருச்சிற்றம்பலம்

 

கொடுங்கண் வெண்டலை

  கொண்டு குறைவிலைப்

படுங்க ணொன்றில

  ராய்ப்பலி தேர்ந்துண்பர்

நெடுங்கண் மங்கைய

  ராட்டயர் நின்றியூர்க்

கடுங்கைக் கூற்றுதைத்

  திட்ட கருத்தரே.  1 

 

 

வீதி வேல்நெடுங்

  கண்ணியர் வெள்வளை

நீதி யேகொளப்

  பாலது நின்றியூர்

வேத மோதி

  விளங்குவெண் தோட்டராய்க்

காதில் வெண்குழை

  வைத்தவெங் கள்வரே.  2 

 

 

புற்றி னார்அர

  வம்புலித் தோல்மிசைச்

சுற்றி னார்சுண்ணப்

  போர்வைகொண் டார்சுடர்

நெற்றிக் கண்ணுடை

  யாரமர் நின்றியூர்

பற்றி னாரைப்பற்

  றாவினை பாவமே.  3 

 

 

பறையின் ஓசையும்

  பாடலின் ஓசையும்

மறையின் ஓசையும்

  மல்கி அயலெலாம்

நிறையும் பூம்பொழில்

  சூழ்திரு நின்றியூர்

உறையும் ஈசனை

  உள்குமென் உள்ளமே.  4 

 

 

சுனையுள் நீலஞ்

  சுளியும் நெடுங்கணாள்

இனைய னென்றென்று

  மேசுவ தென்கொலோ

நினையுந் தண்வயல்

  சூழ்திரு நின்றியூர்ப்

பனையின் ஈருரி

  போர்த்த பரமரே.  5 

 

 

உரைப்பக் கேண்மின்நும்

  உச்சியு ளான்றனை

நிரைப்பொன் மாமதில்

  சூழ்திரு நின்றியூர்

உரைப்பொற் கற்றைய

  ராரிவ ரோவெனிற்

திரைத்துப் பாடித்

  திரிதருஞ் செல்வரே.  6 

 

 

கன்றி யூர்முகில்

  போலுங் கருங்களி

றின்றி ஏறல

  னாலிது வென்கொலோ

நின்றி யூர்பதி

  யாக நிலாயவன்

வென்றி யேறுடை

  எங்கள் விகிர்தனே.  7 

 

 

நிலையி லாவெள்ளை

  மாலையன் நீண்டதோர்

கொலைவி லாலெயில்

  எய்த கொடியவன்

நிலையி னார்வயல்

  சூழ்திரு நின்றியூர்

உரையி னாற்றொழு

  வார்வினை ஓயுமே.  8 

 

 

அஞ்சி யாகிலும்

  அன்புபட் டாகிலும்

நெஞ்சம் வாழி

  நினைநின்றி யூரைநீ

இஞ்சி மாமதில்

  எய்திமை யோர்தொழக்

குஞ்சி வான்பிறை

  சூடிய கூத்தனே.  9 

 

 

எளிய னாமொழி

  யாஇலங் கைக்கிறை

களியி னாற்கயி

  லாய மெடுத்தவன்

நெளிய வூன்ற

  வலானமர் நின்றியூர்

அளியி னாற்றொழு

  வார்வினை யல்குமே. 10

 

திருச்சிற்றம்பலம்