ஐந்தாம்-திருமுறை

013 என்பொ னேயிமை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : வீழிமிழலை

திருச்சிற்றம்பலம்

 

என்பொ னேயிமை

  யோர்தொழு பைங்கழல்

நன்பொ னேநலந்

  தீங்கறி வொன்றிலேன்

செம்பொ னேதிரு

  வீழி மிழலையுள்

அன்ப னேயடி

  யேனைக் குறிக்கொளே.  1 

 

 

கண்ணி னாற்களி

  கூரக்கை யாற்றொழு

தெண்ணு மாறறி

  யாதிளைப் பேன்றனை

விண்ணு ளார்தொழும்

  வீழி மிழலையுள்

அண்ண லேயடி

  யேனைக் குறிக்கொளே.  2 

 

 

ஞால மேவிசும்

  பேநலந் தீமையே

கால மேகருத்

  தேகருத் தாற்றொழுஞ்

சீல மேதிரு

  வீழி மிழலையுள்

கோல மேயடி

  யேனைக் குறிக்கொளே.  3 

 

 

முத்த னேமுதல்

  வாமுகி ழும்முளை

ஒத்த னேயொரு

  வாவுரு வாகிய

சித்த னேதிரு

  வீழி மிழலையுள்

அத்த னேயடி

  யேனைக் குறிக்கொளே.  4 

 

 

கருவ னேகரு

  வாய்த்தெளி வார்க்கெலாம்

ஒருவ னேஉயிர்ப்

  பாய்உணர் வாய்நின்ற

திருவ னேதிரு

  வீழி மிழலையுள்

குருவ னேயடி

  யேனைக் குறிக்கொளே.  5 

 

 

காத்த னேபொழி

  லேழையுங் காதலால்

ஆத்த னேஅம

  ரர்க்கயன் றன்றலை

சேர்த்த னேதிரு

  வீழி மிழலையுள்

கூத்த னேயடி

  யேனைக் குறிக்கொளே.  6 

 

 

நீதி வானவர்

  நித்தல் நியமஞ்செய்

தோதி வானவ

  ரும்முண ராததோர்

வேதி யாவிகிர்

  தாதிரு வீழியுள்

ஆதி யேயடி

  யேனைக் குறிக்கொளே.  7 

 

 

பழகி நின்னடி

  சூடிய பாலனைக்

கழகின் மேல்வைத்த

  காலனைச் சாடிய

அழக னேயணி

  வீழி மிழலையுள்

குழக னேயடி

  யேனைக் குறிக்கொளே.  8 

 

 

அண்ட வானவர்

  கூடிக் கடைந்தநஞ்

சுண்ட வானவ

  னேஉணர் வொன்றிலேன்

விண்ட வான்பொழில்

  வீழி மிழலையுள்

கொண்ட னேயடி

  யேனைக் குறிக்கொளே.  9 

 

 

ஒருத்தன் ஓங்கலைத்

  தாங்கலுற் றானுரம்

வருத்தி னாய்வஞ்ச

  னேன்மனம் மன்னிய

திருத்த னேதிரு

  வீழி மிழலையுள்

அருத்த னேயடி

  யேனைக் குறிக்கொளே. 10

 

திருச்சிற்றம்பலம்