முதல்-திருமுறை

049 போகமார்த்த பூண்முலையாள்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : நள்ளாறு

திருச்சிற்றம்பலம்

 

போகமார்த்த பூண்முலையாள் 

  தன்னோடும் பொன்னகலம்

பாகமார்த்த பைங்கண்வெள் 

  ளேற்றண்ணல் பரமேட்டி

ஆகமார்த்த தோலுடையன் 

  கோவண ஆடையின்மேல்

நாகமார்த்த நம்பெருமான் 

  மேயது நள்ளாறே.  1 

 

தோடுடைய காதுடையன் 

  தோலுடை யன்தொலையாப்

பீடுடைய போர்விடையன் 

  பெண்ணுமோர் பாலுடையன்

ஏடுடைய மேலுலகோ 

  டேழ்கட லுஞ்சூழ்ந்த

நாடுடைய நம்பெருமான் 

  மேயது நள்ளாறே.  2 

 

ஆன்முறையா லாற்றவெண்ணீ 

  றாடி அணியிழையோர்

பான்முறையால் வைத்தபாதம் 

  பத்தர் பணிந்தேத்த

மான்மறியும் வெண்மழுவுஞ் 

  சூலமும் பற்றியகை

நான்மறையான் நம்பெருமான் 

  மேயது நள்ளாறே.  3 

 

புல்கவல்ல வார்சடைமேற் 

  பூம்புனல் பெய்தயலே

மல்கவல்ல கொன்றைமாலை 

  மதியோ டுடன்சூடிப்

பல்கவல்ல தொண்டர்தம் 

  பொற்பாத நிழற்சேர

நல்கவல்ல நம்பெருமான் 

  மேயது நள்ளாறே.  4 

 

ஏறுதாங்கி யூர்திபேணி 

  யேர்கொள் இளமதியம்

ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் 

  ஆடர வஞ்சூடி

நீறுதாங்கி நூல்கிடந்த 

  மார்பில் நிரைகொன்றை

நாறுதாங்கு நம்பெருமான் 

  மேயது நள்ளாறே.  5 

 

திங்களுச்சி மேல்விளங்குந் 

  தேவன் இமையோர்கள்

எங்களுச்சி யெம்மிறைவன் 

  என்றடி யேயிறைஞ்சத்

தங்களுச்சி யால்வணங்குந் 

  தன்னடி யார்கட்கெல்லாம்

நங்களுச்சி நம்பெருமான் 

  மேயது நள்ளாறே.  6 

 

வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி 

  விண்கொண் முழவதிர

அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் 

  பேணுவ தன்றியும்போய்ச்

செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் 

  திகழ்தரு கண்டத்துள்ளே

நஞ்சடைத்த நம்பெருமான் 

  மேயது நள்ளாறே.  7 

 

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் 

  சிலைவரைத் தீயம்பினால்

சுட்டுமாட்டிச் சுண்ண 

  வெண்ணீறாடுவ தன்றியும்போய்ப்

பட்டமார்ந்த சென்னிமேலோர் 

  பால்ம தியஞ்சூடி

நட்டமாடும் நம்பெருமான் 

  மேயது நள்ளாறே.  8 

 

உண்ணலாகா நஞ்சுகண்டத் 

  துண்டுட னேயொடுக்கி

அண்ணலாகா வண்ணல்நீழல் 

  ஆரழல் போலுருவம்

எண்ணலாகா வுள்வினையென் 

  றெள்க வலித்திருவர்

நண்ணலாகா நம்பெருமான் 

  மேயது நள்ளாறே.  9 

 

மாசுமெய்யர் மண்டைத்தேரர் 

  குண்டர் குணம்இலிகள்

பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி 

  யந்நெறி செல்லன்மின்

மூசுவண்டார் கொன்றைசூடி 

  மும்மதி ளும்முடனே

நாசஞ்செய்த நம்பெருமான் 

  மேயது நள்ளாறே.  10 

 

தண்புனலும் வெண்பிறையுந் 

  தாங்கிய தாழ்சடையன்

நண்புநல்லார் மல்குகாழி 

  ஞானசம் பந்தன்நல்ல

பண்புநள்ளா றேத்துபாடல் 

  பத்தும் இவைவல்லார்

உண்புநீங்கி வானவரோ 

  டுலகி லுறைவாரே. 11

 

திருச்சிற்றம்பலம்