நான்காம்-திருமுறை

104 மாசிலொள் வாள்போல்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : அதிகை வீரட்டானம்

திருச்சிற்றம்பலம்

 

மாசிலொள் வாள்போல் மறியும் 

  மணிநீர்த் திரைத்தொகுதி

ஊசலை யாடியங் கொண்சிறை 

  அன்னம் உறங்கலுற்றால்

பாசறை நீலம் பருகிய 

  வண்டுபண் பாடல்கண்டு

வீசுங் கெடில வடகரைத் 

  தேயெந்தை வீரட்டமே.  1 

 

 

பைங்காற் றவளை பறைகொட்டப் 

  பாசிலை நீர்ப்படுகர்

அங்காற் குவளைமேல் ஆவி 

  உயிர்ப்ப அருகுலவுஞ்

செங்காற் குருகிவை சேருஞ் 

  செறிகெடி லக்கரைத்தே

வெங்காற் குருசிலை வீரன் 

  அருள்வைத்த வீரட்டமே.  2 

 

 

அம்மலர்க் கண்ணியர் அஞ்சனஞ் 

  செந்துவர் வாயிளையார்

வெம்முலைச் சாந்தம் விலைபெறு 

  மாலை யெடுத்தவர்கள்

தம்மருங் கிற்கிரங் கார்தடந் 

  தோள்மெலி யக்குடைவார்

விம்மு புனற்கெடி லக்கரைத் 

  தேயெந்தை வீரட்டமே.  3 

 

 

மீனுடைத் தண்புனல் வீரட்ட 

  ரேநும்மை வேண்டுகின்ற

தியானுடைச் சில்குறை ஒன்றுள 

  தால்நறுந் தண்ணெருக்கின்

தேனுடைக் கொன்றைச் சடையுடைக் 

  கங்கைத் திரைதவழுங்

கூனுடைத் திங்கட் குழவியெப் 

  போதுங் குறிக்கொண்மினே.  4 

 

 

ஆரட்ட தேனும் இரந்துண் 

  டகமக வன்றிரிந்து

வேரட்ட நிற்பித் திடுகின்ற 

  தால்விரி நீர்ப்பரவைச்

சூரட்ட வேலவன் தாதையைச் 

  சூழ்வய லாரதிகை

வீரட்டத் தானை விரும்பா 

  வரும்பாவ வேதனையே.  5 

 

 

படர்பொற் சடையும் பகுவாய் 

  அரவும் பனிமதியுஞ்

சுடலைப் பொடியு மெல்லா 

  முளவேயவர் தூயதெண்ணீர்க்

கெடிலக் கரைத்திரு வீரட்ட 

  ராவர்கெட் டேனடைந்தார்

நடலைக்கு நற்றுணை யாகுங்கண் 

  டீரவர் நாமங்களே.  6 

 

 

காளங் கடந்ததொர் கண்டத்த 

  ராகிக் கண்ணார்கெடில

நாளங் கடிக்கொர் நகரமு 

  மாதிற்கு நன்கிசைந்த

தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு 

  மியாழ்கொண்டுந் தாமங்ஙனே

வேடங்கள் கொண்டும் விசும்புசெல் 

  வாரவர் வீரட்டரே.  7 

 

 

இப்பதிகத்தில் 8-ம் செய்யுட்கள் மறைந்து போயின.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுட்கள் மறைந்து போயின.  9 

 

 

இப்பதிகத்தில் 10-ம் செய்யுட்கள் மறைந்து போயின. 10

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

உக்கிர பாண்டியன் பிறப்பு
View Details
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
View Details
குதம்பைச் சித்தர்
View Details