நான்காம்-திருமுறை

103 வடிவுடை மாமலை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : நாகைக்காரோணம்

திருச்சிற்றம்பலம்

 

வடிவுடை மாமலை மங்கைபங் 

  காகங்கை வார்சடையாய்

கடிகமழ் சோலை சுலவு 

  கடல்நாகைக் காரோணனே

பிடிமத வாரணம் பேணுந் 

  துரகநிற் கப்பெரிய

இடிகுரல் வெள்ளெரு தேறுமி 

  தென்னைகொல் எம்மிறையே.  1 

 

 

கற்றார் பயில்கடல் நாகைக்கா 

  ரோணத்தெங் கண்ணுதலே

விற்றாங் கியகரம் வேல்நெடுங் 

  கண்ணி வியன்கரமே

நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித் 

  தகர நின்கரமே

செற்றார் புரஞ்செற்ற சேவக 

  மென்னைகொல் செப்புமினே.  2 

 

 

தூமென் மலர்க்கணை கோத்துத்தீ 

  வேள்வி தொழிற்படுத்த

காமன் பொடிபடக் காய்ந்த 

  கடல்நாகைக் காரோணநின்

நாமம் பரவி நமச்சிவா 

  யவென்னும் அஞ்செழுத்துஞ்

சாமன் றுரைக்கத் தருதிகண் 

  டாயெங்கள் சங்கரனே.  3 

 

 

பழிவழி யோடிய பாவிப் 

  பறிதலைக் குண்டர்தங்கள்

மொழிவழி யோடி முடிவேன் 

  முடியாமைக் காத்துக்கொண்டாய்

கழிவழி யோதம் உலவு 

  கடல்நாகைக் காரோணவென்

வழிவழி யாளாகும் வண்ணம் 

  அருளெங்கள் வானவனே.  4 

 

 

செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை 

  வெண்ணகைத் தேன்மொழியார்

வந்து வலஞ்செய்து மாநட 

  மாட மலிந்தசெல்வக்

கந்த மலிபொழில் சூழ்கடல் 

  நாகைக்கா ரோணமென்றுஞ்

சிந்தைசெய் வாரைப் பிரியா 

  திருக்குந் திருமங்கையே.  5 

 

 

பனைபுரை கைம்மத யானை 

  யுரித்த பரஞ்சுடரே

கனைகடல் சூழ்தரு நாகைக்கா 

  ரோணத்தெங் கண்ணுதலே

மனைதுறந் தல்லுணா வல்லமண் 

  குண்டர் மயக்கநீக்கி

எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி 

  யான்செயும் இச்சைகளே.  6 

 

 

சீர்மலி செல்வம் பெரிதுடை 

  யசெம்பொன் மாமலையே

கார்மலி சோலை சுலவு 

  கடல்நாகைக் காரோணனே

வார்மலி மென்முலை யார்பலி 

  வந்திடச் சென்றிரந்து

ஊர்மலி பிச்சைகொண் டுண்பது 

  மாதிமை யோவுரையே.  7 

 

 

வங்கம் மலிகடல் நாகைக்கா 

  ரோணத்தெம் வானவனே

எங்கள் பெருமானொர் விண்ணப்பம் 

  உண்டது கேட்டருளீர்

கங்கை சடையுட் கரந்தாயக் 

  கள்ளத்தை மெள்ளவுமை

நங்கை அறியிற்பொல் லாதுகண்டா 

  யெங்கள் நாயகனே.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று.  9 

 

 

கருந்தடங் கண்ணியுந் தானுங் 

  கடல்நாகைக் காரோணத்தான்

இருந்த திருமலை யென்றிறைஞ் 

  சாதன் றெடுக்கலுற்றான்

பெருந்தலை பத்தும் இருபது 

  தோளும் பிதிர்ந்தலற

இருந்தரு ளிச்செய்த தேமற்றுச் 

  செய்திலன் எம்மிறையே. 10

 

திருச்சிற்றம்பலம்