நான்காம்-திருமுறை

102 வேம்பினைப் பேசி

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : ஆரூர்

திருச்சிற்றம்பலம்

 

வேம்பினைப் பேசி விடக்கினை 

  யோம்பி வினைபெருக்கித்

தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் 

  துணையென் றிருத்திர்தொண்டீர்

ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர் 

  அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச்

சாம்பலைப் பூசிச் சலமின்றித் 

  தொண்டுபட் டுய்ம்மின்களே.  1 

 

 

ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் 

  ஆரூர் அகத்தடக்கிப்

பாரூர் பரிப்பத்தம் பங்குனி 

  உத்திரம் பாற்படுத்தா

னாரூர் நறுமலர் நாதன் 

  அடித்தொண்டன் நம்பிநந்தி

நீரால் திருவிளக் கிட்டமை 

  நீணா டறியுமன்றே.  2 

 

 

பூம்படி மக்கலம் பொற்படி 

  மக்கலம் என்றிவற்றால்

ஆம்படி மக்கல மாகிலும் 

  ஆரூர் இனிதமர்ந்தார்

தாம்படி மக்கலம் வேண்டுவ 

  ரேல்தமிழ் மாலைகளால்

நாம்படி மக்கலஞ் செய்து 

  தொழுதும் மடநெஞ்சமே.  3 

 

 

துடிக்கின்ற பாம்பரை ஆர்த்துத் 

  துளங்கா மதியணிந்து

முடித்தொண்ட ராகி முனிவர்

  பணிசெய்வ தேயுமன்றிப்

பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர் 

  பாதம் பொறுத்தபொற்பால்

அடித்தொண்டன் நந்தியென் பானுளன் 

  ஆரூர் அமுதினுக்கே.  4 

 

 

கரும்பு பிடித்தவர் காயப்பட் 

  டாரங்கோர் கோடலியால்

இரும்பு பிடித்தவர் இன்புறப் 

  பட்டார் இவர்கள்நிற்க

அரும்பவிழ் தண்பொழில் சூழணி 

  ஆரூர் அமர்ந்தபெம்மான்

விரும்பு மனத்தினை யாதொன்று 

  நானுன்னை வேண்டுவனே.  5 

 

 

கொடிகொள் விதானங் கவரி 

  பறைசங்கங் கைவிளக்கோ

டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர் 

  எய்தியும் ஊனமில்லா

அடிகளும் ஆரூர் அகத்தின 

  ராயினும் அந்தவளப்

பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு 

  நந்தி புறப்படிலே.  6 

 

 

இப்பதிகத்தில் 7-ம்செய்யுட்கள் சிதைந்து போயின.  7 

 

 

இப்பதிகத்தில் 8-ம்செய்யுட்கள் சிதைந்து போயின.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம்செய்யுட்கள் சிதைந்து போயின.  9 

 

 

சங்கொலிப் பித்திடு மின்சிறு 

  காலைத் தடவழலில்

குங்கிலி யப்புகைக் கூட்டென்றுங் 

  காட்டி இருபதுதோள்

அங்குலம் வைத்தவன் செங்குரு 

  திப்புன லோடஅஞ்ஞான்

றங்குலி வைத்தான் அடித்தா 

  மரையென்னை ஆண்டனவே. 10

 

திருச்சிற்றம்பலம்