நான்காம்-திருமுறை

095 வான்சொட்டச் சொட்டநின்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : வீழிமிழலை

திருச்சிற்றம்பலம்

 

வான்சொட்டச் சொட்டநின் றட்டும் 

  வளர்மதி யோடயலே

தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந் 

  திருக்கொன்றை சென்னிவைத்தீர்

மான்பெட்டை நோக்கி மணாளீர் 

  மணிநீர் மிழலையுள்ளீர்

நான்சட்ட வும்மை மறக்கினும் 

  என்னைக் குறிக்கொண்மினே.  1 

 

 

அந்தமும் ஆதியு மாகிநின் 

  றீரண்டம் எண்டிசையும்

பந்தமும் வீடும் பரப்புகின் 

  றீர்பசு வேற்றுகந்தீர்

வெந்தழல் ஓம்பு மிழலையுள் 

  ளீரென்னைத் தென்றிசைக்கே

உந்திடும் போது மறக்கினும் 

  என்னைக் குறிக்கொண்மினே.  2 

 

 

அலைக்கின்ற நீர்நிலங் காற்றனல் 

  அம்பர மாகிநின்றீர்

கலைக்கன்று சேருங் கரத்தீர் 

  கலைப்பொரு ளாகிநின்றீர்

விலக்கின்றி நல்கும் மிழலையுள் 

  ளீர்மெய்யிற் கையொடுகால்

குலைக்கின்று நும்மை மறக்கினும் 

  என்னைக் குறிக்கொண்மினே.  3 

 

 

தீத்தொழி லான்றலை தீயிலிட் 

  டுச்செய்த வேள்விசெற்றீர்

பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை 

  யீர்பிடித் துத்திரியும்

வேய்த்தொழி லாளர் மிழலையுள் 

  ளீர்விக்கி அஞ்செழுத்தும்

ஓத்தொழிந் தும்மை மறக்கினும் 

  என்னைக் குறிக்கொண்மினே.  4 

 

 

தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ் 

  சுற்றியும் பத்திமையான்

மேற்பட்ட அந்தணர் வீழியும் 

  என்னையும் வேறுடையீர்

நாட்பட்டு வந்து பிறந்தேன் 

  இறக்க நமன்தமர்தம்

கோட்பட்டு நும்மை மறக்கினும் 

  என்னைக் குறிக்கொண்மினே.  5 

 

 

கண்டியிற் பட்ட கழுத்துடை 

  யீர்கரி காட்டிலிட்ட

பண்டியிற் பட்ட பரிகலத் 

  தீர்பதி வீழிகொண்டீர்

உண்டியிற் பட்டினி நோயில் 

  உறக்கத்தில் உம்மையைவர்

கொண்டியிற் பட்டு மறக்கினும் 

  என்னைக் குறிக்கொண்மினே.  6 

 

 

தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண் 

  டீர்தூய வெள்ளெருதொன்

றேற்றங்கொண் டீரெழில் வீழி 

  மிழலை இருக்கைகொண்டீர்

சீற்றங்கொண் டென்மேல் சிவந்ததொர் 

  பாசத்தால் வீசியவெங்

கூற்றங்கண் டும்மை மறக்கினும் 

  என்னைக் குறிக்கொண்மினே.  7 

 

 

சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ் 

  சூடிச்சொக் கம்பயின்றீர்

பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை 

  யீர்படர் தீப்பருக

விழிப்பட்ட காமனை வீட்டீர் 

  மிழலையுள் ளீர்பிறவிச்

சுழிப்பட்டு நும்மை மறக்கினும் 

  என்னைக் குறிக்கொண்மினே.  8 

 

 

பிள்ளையிற் பட்ட பிறைமுடி 

  யீர்மறை யோதவல்லீர்

வெள்ளையிற் பட்டதோர் நீற்றீர் 

  விரிநீர் மிழலையுள்ளீர்

நள்ளையிற் பட்டைவர் நக்கரைப் 

  பிக்க நமன்தமர்தங்

கொள்ளையிற் பட்டு மறக்கினும் 

  என்னைக் குறிக்கொண்மினே.  9 

 

 

கறுக்கொண் டரக்கன் கயிலையைப் 

  பற்றிய கையுமெய்யும்

நெறுக்கென் றிறச்செற்ற சேவடி 

  யாற்கூற்றை நீறுசெய்தீர்

வெறிக்கொன்றை மாலை முடியீர் 

  விரிநீர் மிழலையுள்ளீர்

இறக்கின்று நும்மை மறக்கினும் 

  என்னைக் குறிக்கொண்மினே. 10

 

திருச்சிற்றம்பலம்