நான்காம்-திருமுறை

093 வானவர் தானவர்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : கண்டியூர்வீரட்டம்

திருச்சிற்றம்பலம்

 

வானவர் தானவர் வைகல் 

  மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்

தானவர் மால்பிர மன்னறி 

  யாத தகைமையினான்

ஆனவ னாதிபு ராணனன் 

  றோடிய பன்றியெய்த

கானவ னைக்கண்டி யூரண்ட 

  வாணர் தொழுகின்றதே.  1 

 

 

வான மதியமும் வாளர 

  வும்புன லோடுசடைத்

தான மதுவென வைத்துழல் 

  வான்றழல் போலுருவன்

கான மறியொன்று கையுடை 

  யான்கண்டி யூரிருந்த

ஊனமில் வேத முடையானை 

  நாமடி யுள்குவதே.  2 

 

 

பண்டங் கறுத்ததோர் கையுடை 

  யான்படைத் தான்றலையை

உண்டங் கறுத்ததும் ஊரொடு 

  நாடவை தானறியுங்

கண்டங் கறுத்த மிடறுடை 

  யான்கண்டி யூரிருந்த

தொண்டர் பிரானைக்கண் டீரண்ட 

  வாணர் தொழுகின்றதே.  3 

 

 

முடியின்முற் றாததொன் றில்லையெல் 

  லாமுடன் தானுடையான்

கொடியுமுற் றவ்விடை யேறியோர் 

  கூற்றொரு பாலுடையான்

கடியமுற் றவ்வினை நோய்களை 

  வான்கண்டி யூரிருந்தான்

அடியுமுற் றார்தொண்டர் இல்லைகண் 

  டீரண்ட வானவரே.  4 

 

 

பற்றியொ ரானை யுரித்த 

  பிரான்பவ ளத்திரள்போல்

முற்றும் அணிந்ததொர் நீறுடை 

  யான்முன்ன மேகொடுத்த

கற்றங் குடையவன் றானறி 

  யான்கண்டி யூரிருந்த

குற்றமில் வேத முடையானை 

  யாமண்டர் கூறுவதே.  5 

 

 

போர்ப்பனை யானை யுரித்த 

  பிரான்பொறி வாயரவஞ்

சேர்ப்பது வானத் திரைகடல் 

  சூழுல கம்மிதனைக்

காப்பது காரண மாகக்கொண் 

  டான்கண்டி யூரிருந்த

கூர்ப்புடை ஒள்வாள் மழுவனை 

  யாமண்டர் கூறுவதே.  6 

 

 

அட்டது காலனை ஆய்ந்தது 

  வேதமா றங்கமன்று

சுட்டது காமனைக் கண்ணத 

  னாலே தொடர்ந்தெரியக்

கட்டவை மூன்று மெரித்த 

  பிரான்கண்டி யூரிருந்த

குட்டமுன் வேதப் படையனை 

  யாமண்டர் கூறுவதே.  7 

 

 

அட்டும் ஒலிநீர் அணிமதி 

  யும்மல ரானவெல்லாம்

இட்டுப் பொதியுஞ் சடைமுடி 

  யான்இண்டை மாலையங்கைக்

கட்டும் அரவது தானுடை 

  யான்கண்டி யூரிருந்த

கொட்டும் பறையுடைக் கூத்தனை 

  யாமண்டர் கூறுவதே.  8 

 

 

மாய்ந்தன தீவினை மங்கின 

  நோய்கள் மறுகிவிழத்

தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் 

  லாநம்மைச் செற்றநங்கைக்

காய்ந்த பிரான்கண்டி யூரெம் 

  பிரான்அங்க மாறினையும்

ஆய்ந்த பிரானல்ல னோவடி 

  யேனையாட் கொண்டவனே.  9 

 

 

மண்டி மலையை யெடுத்துமத் 

  தாக்கியவ் வாசுகியைத்

தண்டி அமரர் கடைந்த 

  கடல்விடங் கண்டருளி

உண்ட பிரான்நஞ் சொளித்தபி 

  ரான்அஞ்சி யோடிநண்ணக்

கண்ட பிரானல்ல னோகண்டி 

  யூரண்ட வானவனே. 10

 

திருச்சிற்றம்பலம்