நான்காம்-திருமுறை

090 கையது காலெரி

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : வேதிகுடி

திருச்சிற்றம்பலம்

 

கையது காலெரி நாகங் 

  கனல்விடு சூலமது

வெய்யது வேலைநஞ் சுண்ட 

  விரிசடை விண்ணவர்கோன்

செய்யினில் நீல மணங்கம 

  ழுந்திரு வேதிகுடி

ஐயனை ஆரா அமுதினை 

  நாமடைந் தாடுதுமே.  1 

 

 

கைத்தலை மான்மறி யேந்திய 

  கையன் கனல்மழுவன்

பொய்த்தலை யேந்திநற் பூதி 

  யணிந்து பலிதிரிவான்

செய்த்தலை வாளைகள் பாய்ந்துக 

  ளுந்திரு வேதிகுடி

அத்தனை ஆரா அமுதினை 

  நாமடைந் தாடுதுமே.  2 

 

 

முன்பின் முதல்வன் முனிவனெம் 

  மேலை வினைகழித்தான்

அன்பின் நிலையில் அவுணர் 

  புரம்பொடி யானசெய்யுஞ்

செம்பொனை நன்மலர் மேலவன் 

  சேர்திரு வேதிகுடி

அன்பனை நம்மை யுடையனை 

  நாமடைந் தாடுதுமே.  3 

 

 

பத்தர்கள் நாளும் மறவார் 

  பிறவியை யொன்றறுப்பான்

முத்தர்கள் முன்னம் பணிசெய்து 

  பாரிடம் முன்னுயர்த்தான்

கொத்தன கொன்றை மணங்கம 

  ழுந்திரு வேதிகுடி

அத்தனை ஆரா அமுதினை 

  நாமடைந் தாடுதுமே.  4 

 

 

ஆனணைந் தேறுங் குறிகுண 

  மாரறி வாரவர்கை

மானணைந் தாடு மதியும் 

  புனலுஞ் சடைமுடியன்

தேனணைந் தாடிய வண்டு 

  பயில்திரு வேதிகுடி

ஆனணைந் தாடு மழுவனை 

  நாமடைந் தாடுதுமே.  5 

 

 

எண்ணும் எழுத்துங் குறியும் 

  அறிபவர் தாமொழியப்

பண்ணின் இசைமொழி பாடிய 

  வானவர் தாம்பணிவார்

திண்ணென் வினைகளைத் தீர்க்கும் 

  பிரான்றிரு வேதிகுடி

நண்ண அரிய அமுதினை 

  நாமடைந் தாடுதுமே.  6 

 

 

ஊர்ந்த விடையுகந் தேறிய 

  செல்வனை நாமறியோம்

ஆர்ந்த மடமொழி மங்கையொர் 

  பாகம் மகிழ்ந்துடையான்

சேர்ந்த புனற்சடைச் செல்வப் 

  பிரான்றிரு வேதிகுடிச்

சார்ந்த வயலணி தண்ணமு 

  தையடைந் தாடுதுமே.  7 

 

 

எரியும் மழுவினன் எண்ணியும் 

  மற்றொரு வன்றலையுள்

திரியும் பலியினன் தேயமும் 

  நாடுமெல் லாமுடையான்

விரியும் பொழிலணி சேறு 

  திகழ்திரு வேதிகுடி

அரிய அமுதினை அன்பர்க 

  ளோடடைந் தாடுதுமே.  8 

 

 

மையணி கண்டன் மறைவிரி 

  நாவன் மதித்துகந்த

மெய்யணி நீற்றன் விழுமிய 

  வெண்மழு வாட்படையான்

செய்ய கமல மணங்கம 

  ழுந்திரு வேதிகுடி

ஐயனை ஆரா அமுதினை 

  நாமடைந் தாடுதுமே.  9 

 

 

வருத்தனை வாளரக் கன்முடி 

  தோளொடு பத்திறுத்த

பொருத்தனைப் பொய்யா அருளனைப் 

  பூதப் படையுடைய

திருத்தனைத் தேவர் பிரான்றிரு 

  வேதி குடியுடைய

அருத்தனை ஆரா அமுதினை 

  நாமடைந் தாடுதுமே. 10

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

ஏயர்கோன் கலிக்காம நாயனார்
View Details
பிண்ணாக்கீசர்
View Details
பாம்பாட்டிச் சித்தர்
View Details