நான்காம்-திருமுறை

089 பாரிடஞ் சாடிய

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : நெய்த்தானம்

திருச்சிற்றம்பலம்

 

பாரிடஞ் சாடிய பல்லுயிர் 

  வானம ரர்க்கருளிக்

காரடைந் தகடல் வாயுமிழ் 

  நஞ்சமு தாகவுண்டான்

ஊரடைந் திவ்வுல கிற்பலி 

  கொள்வது நாமறியோம்

நீரடைந் தகரை நின்றநெய்த் 

  தானத் திருந்தவனே.  1 

 

 

தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி 

  யாய்நின் திருச்சடைமேற்

பாய்ந்தகங் கைப்புனற் பன்முக 

  மாகிப் பரந்தொலிப்ப

ஆய்ந்திலங் கும்மழு வேலுடை 

  யாயடி யேற்குரைநீ

ஏந்திள மங்கையும் நீயும்நெய்த் 

  தானத் திருந்ததுவே.  2 

 

 

கொன்றடைந் தாடிக் குமைத்திடுங் 

  கூற்றமொன் னார்மதின்மேற்

சென்றடைந் தாடிப் பொருததுந் 

  தேசமெல் லாமறியுங்

குன்றடைந் தாடுங் குளிர்பொழிற் 

  காவிரி யின்கரைமேற்

சென்றடைந் தார்வினை தீர்க்குநெய்த் 

  தானத் திருந்தவனே.  3 

 

 

கொட்டு முழவர வத்தொடு 

  கோலம் பலஅணிந்து

நட்டம் பலபயின் றாடுவர் 

  நாகம் அரைக் கசைத்துச்

சிட்டர் திரிபுரந் தீயெழச் 

  செற்ற சிலையுடையான்

இட்ட முமையொடு நின்றநெய்த் 

  தானத் திருந்தவனே.  4 

 

 

கொய்ம்மலர்க் கொன்றை துழாய்வன்னி 

  மத்தமுங் கூவிளமும்

மெய்ம்மலர் வேய்ந்த விரிசடைக் 

  கற்றைவிண் ணோர்பெருமான்

மைம்மலர் நீல நிறங்கருங் 

  கண்ணியோர் பால்மகிழ்ந்தான்

நின்மல னாடல் நிலயநெய்த் 

  தானத் திருந்தவனே.  5 

 

 

பூந்தார் நறுங்கொன்றை மாலையை 

  வாங்கிச் சடைக்கணிந்து

கூர்ந்தார் விடையினை யேறிப்பல் 

  பூதப் படைநடுவே

போந்தார் புறவிசை பாடவும் 

  ஆடவுங் கேட்டருளிச்

சேர்ந்தார் உமையவ ளோடுநெய்த் 

  தானத் திருந்தவனே.  6 

 

 

பற்றின பாம்பன் படுத்த 

  புலியுரித் தோலுடையன்

முற்றின மூன்று மதில்களை 

  மூட்டி யெரித்தறுத்தான்

சுற்றிய பூதப் படையினன் 

  சூல மழுவொருமான்

செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த் 

  தானத் திருந்தவனே.  7 

 

 

விரித்த சடையினன் விண்ணவர் 

  கோன்விட முண்டகண்டன்

உரித்த கரியுரி மூடியொன் 

  னார்மதில் மூன்றுடனே

எரித்த சிலையினன் ஈடழியா 

  தென்னை ஆண்டுகொண்ட

தரித்த உமையவ ளோடுநெய்த் 

  தானத் திருந்தவனே.  8 

 

 

தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை 

  துன்னிய செஞ்சடைமேல்

வாங்கா மதியமும் வாளர 

  வுங்கங்கை தான்புனைந்தான்

தேங்கார் திரிபுரந் தீயெழ 

  வெய்து தியக்கறுத்து

நீங்கான் உமையவ ளோடுநெய்த் 

  தானத் திருந்தவனே.  9 

 

 

ஊட்டிநின் றான்பொரு வானில 

  மும்மதில் தீயம்பினால்

மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து 

  வீழவும் வானவர்க்குக்

காட்டிநின் றான்கத மாக்கங்கை 

  பாயவொர் வார்சடையை

நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த் 

  தானத் திருந்தவனே. 10

 

திருச்சிற்றம்பலம்