நான்காம்-திருமுறை

088 மாலினை மாலுற

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : பூந்துருத்தி

திருச்சிற்றம்பலம்

 

மாலினை மாலுற நின்றான் 

  மலைமகள் தன்னுடைய

பாலனைப் பான்மதி சூடியைப் 

  பண்புண ரார்மதின்மேற்

போலனைப் போர்விடை யேறியைப் 

  பூந்துருத் திமகிழும்

ஆலனை ஆதிபு ராணனை 

  நானடி போற்றுவதே.  1 

 

 

மறியுடை யான்மழு வாளினன் 

  மாமலை மங்கையோர்பால்

குறியுடை யான்குண மொன்றறிந் 

  தாரில்லை கூறிலவன்

பொறியுடை வாளர வத்தவன் 

  பூந்துருத் தியுறையும்

அறிவுடை ஆதி புராணனை 

  நானடி போற்றுவதே.  2 

 

 

மறுத்தவர் மும்மதில் மாயவொர் 

  வெஞ்சிலை கோத்தோரம்பால்

அறுத்தனை ஆலதன் கீழனை 

  ஆல்விட முண்டதனைப்

பொறுத்தனைப் பூதப் படையனைப் 

  பூந்துருத் தியுறையும்

நிறத்தனை நீல மிடற்றனை 

  யானடி போற்றுவதே.  3 

 

 

உருவினை ஊழி முதல்வனை 

  ஓதி நிறைந்துநின்ற

திருவினைத் தேசம் படைத்தனைச் 

  சென்றடைந் தேனுடைய

பொருவினை யெல்லாந் துரந்தனைப் 

  பூந்துருத் தியுறையுங்

கருவினைக் கண்மூன் றுடையனை 

  யானடி போற்றுவதே.  4 

 

 

தக்கன்றன் வேள்வி தகர்த்தவன் 

  சார மதுவன்றுகோள்

மிக்கன மும்மதில் வீயவோர் 

  வெஞ்சிலை கோத்தொரம்பால்

புக்கனன் பொன்றிகழ்ந் தன்னதோர் 

  பூந்துருத் தியுறையும்

நக்கனை நங்கள் பிரான்றனை 

  நானடி போற்றுவதே.  5 

 

 

அருகடை மாலையுந் தானுடை 

  யான்அழ காலமைந்த

உருவுடை மங்கையுந் தன்னொரு 

  பாலுல காயுநின்றான்

பொருபடை வேலினன் வில்லினன் 

  பூந்துருத் தியுறையுந்

திருவுடைத் தேச மதியனை 

  யானடி போற்றுவதே.  6 

 

 

மன்றியுந் நின்ற மதிலரை 

  மாய வகைகெடுக்கக்

கன்றியுந் நின்று கடுஞ்சிலை 

  வாங்கிக் கனலம்பினாற்

பொன்றியும் போகப் புரட்டினன் 

  பூந்துருத் தியுறையும்

அன்றியுஞ் செய்த பிரான்றனை 

  யானடி போற்றுவதே.  7 

 

 

மின்னிறம் மிக்க இடையுமை 

  நங்கையொர் பான்மகிழ்ந்தான்

என்னிற மென்றம ரர்பெரி 

  யாரின்னந் தாமறியார்

பொன்னிற மிக்க சடையவன் 

  பூந்துருத் தியுறையும்

என்னிற வெந்தை பிரான்றனை 

  யானடி போற்றுவதே.  8 

 

 

அந்தியை நல்ல மதியினை 

  யார்க்கும் அறிவரிய

செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினை 

  சென்றடைந் தேனுடைய

புந்தியைப் புக்க அறிவினை 

  பூந்துருத் தியுறையும்

நந்தியை நங்கள் பிரான்றனை 

  நானடி போற்றுவதே.  9 

 

 

பைக்கையும் பாந்தி விழிக்கையும் 

  பாம்பு சடையிடையே

வைக்கையும் வானிழி கங்கையும் 

  மங்கை நடுக்குறவே

மொய்க்கை அரக்கனை யூன்றினன் 

  பூந்துருத் தியுறையும்

மிக்கநல் வேத விகிர்தனை 

  நானடி போற்றுவதே. 10

 

திருச்சிற்றம்பலம்