நான்காம்-திருமுறை

080 பாளையு டைக்கமு

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

பாளையு டைக்கமு கோங்கிப்பன் 

  மாடம்நெ ருங்கியெங்கும்

வாளையு டைப்புனல் வந்தெறி 

  வாழ்வயல் தில்லைதன்னுள்

ஆளவு டைக்கழற் சிற்றம்ப 

  லத்தரன் ஆடல்கண்டாற்

பீளையு டைக்கண்க ளாற்பின்னைப் 

  பேய்த்தொண்டர் காண்பதென்னே.  1 

 

 

பொருவிடை யொன்றுடைப் புண்ணிய 

  மூர்த்தி புலியதளன்

உருவுடை யம்மலை மங்கைம 

  ணாளன் உலகுக்கெல்லாந்

திருவுடை அந்தணர் வாழ்கின்ற 

  தில்லைச்சிற் றம்பலவன்

திருவடி யைக்கண்ட கண்கொண்டு 

  மற்றினிக் காண்பதென்னே.  2 

 

 

தொடுத்த மலரொடு தூபமுஞ் 

  சாந்துங்கொண் டெப்பொழுதும்

அடுத்து வணங்கும் அயனொடு 

  மாலுக்குங் காண்பரியான்

பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய 

  தில்லைச்சிற் றம்பலவன்

உடுத்த துகில்கண்ட கண்கொண்டு 

  மற்றினிக் காண்பதென்னே.  3 

 

 

வைச்ச பொருள்நமக் காகுமென் 

  றெண்ணி நமச்சிவாய

அச்ச மொழிந்தேன் அணிதில்லை 

  யம்பலத் தாடுகின்ற

பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி 

  உந்தியின் மேலசைத்த

கச்சின் அழகுகண் டாற்பின்னைக் 

  கண்கொண்டு காண்பதென்னே.  4 

 

 

செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற 

  தில்லைச்சிற் றம்பலவன்

மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் 

  கண்டு மகிழ்ந்துநிற்க

நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த 

  நீல மணிமிடற்றான்

கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக் 

  கண்கொண்டு காண்பதென்னே.  5 

 

 

ஊனத்தை நீக்கி உலகறிய 

  என்னை யாட்கொண்டவன்

தேனொத் தெனக்கினி யான்தில்லைச் 

  சிற்றம் பலவனெங்கோன்

வானத் தவருய்ய வன்னஞ்சை 

  யுண்டகண் டத்திலங்கும்

ஏனத் தெயிறு கண்டாற்பின்னைக் 

  கண்கொண்டு காண்பதென்னே.  6 

 

 

தெரித்த கணையாற் திரிபுர 

  மூன்றுஞ்செந் தீயின்மூழ்க

எரித்த இறைவன் இமையவர் 

  கோமான் இணையடிகள்

தரித்த மனத்தவர் வாழ்கின்ற 

  தில்லைச்சிற் றம்பலவன்

சிரித்த முகங்கண்ட கண்கொண்டு 

  மற்றினிக் காண்பதென்னே.  7 

 

 

சுற்று மமரர் சுரபதி 

  நின்திருப் பாதமல்லால்

பற்றொன் றிலோமென் றழைப்பப் 

  பரவையுள் நஞ்சையுண்டான்

செற்றங் கனங்கனைத் தீவிழித் 

  தான்றில்லை யம்பலவன்

நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு 

  மற்றினிக் காண்பதென்னே.  8 

 

 

சித்தத் தெழுந்த செழுங்கம 

  லத்தன்ன சேவடிகள்

வைத்த மனத்தவர் வாழ்கின்ற 

  தில்லைச்சிற் றம்பலவன்

முத்தும் வயிரமும் மாணிக்கந் 

  தன்னுள் விளங்கியதூ

மத்த மலர்கண்ட கண்கொண்டு 

  மற்றினிக் காண்பதென்னே.  9 

 

 

தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி 

  யுன்னித் தடவரையை

வரைக்கை களாலெடுத் தார்ப்ப 

  மலைமகள் கோன்சிரித்து

அரக்கன் மணிமுடி பத்தும் 

  அணிதில்லை யம்பலவன்

நெருக்கி மிதித்த விரல்கண்ட 

  கண்கொண்டு காண்பதென்னே. 10

 

திருச்சிற்றம்பலம்