நான்காம்-திருமுறை

078 வென்றிலேன் புலன்க

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

வென்றிலேன் புலன்க ளைந்தும் 

  வென்றவர் வளாகந் தன்னுள்

சென்றிலே னாத லாலே 

  செந்நெறி யதற்குஞ் சேயேன்

நின்றுளே துளும்பு கின்றேன் 

  நீசனேன் ஈச னேயோ

இன்றுளேன் நாளை யில்லேன் 

  என்செய்வான் தோன்றி னேனே.  1 

 

 

கற்றிலேன் கலைகள் ஞானங் 

  கற்றவர் தங்க ளோடும்

உற்றிலே னாத லாலே 

  உணர்வுக்குஞ் சேய னானேன்

பெற்றிலேன் பெருந்த டங்கண் 

  பேதைமார் தமக்கும் பொல்லேன்

எற்றுளேன் இறைவ னேநான் 

  என்செய்வான் தோன்றி னேனே.  2 

 

 

மாட்டினேன் மனத்தை முன்னே 

  மறுமையை உணர மாட்டேன்

மூட்டிநான் முன்னை நாளே 

  முதல்வனை வணங்க மாட்டேன்

பாட்டினாய் போல நின்று 

  பற்றதாம் பாவந் தன்னை

ஈட்டினேன் களைய மாட்டேன் 

  என்செய்வான் தோன்றி னேனே.  3 

 

 

கரைக்கடந் தோத மேறுங் 

  கடல்விட முண்ட கண்டன்

உரைக்கடந் தோது நீர்மை 

  யுணர்ந்திலே னாத லாலே

அரைக்கிடந் தசையு நாகம் 

  அசைப்பனே இன்ப வாழ்க்கைக்

கிரைக்கிடைந் துருகு கின்றேன் 

  என்செய்வான் தோன்றி னேனே.  4 

 

 

செம்மைவெண் ணீறு பூசுஞ் 

  சிவனவன் தேவ தேவன்

வெம்மைநோய் வினைகள் தீர்க்கும் 

  விகிர்தனுக் கார்வ மெய்தி

அம்மைநின் றடிமை செய்யா 

  வடிவிலா முடிவில் வாழ்க்கைக்

கிம்மைநின் றுருகு கின்றேன் 

  என்செய்வான் தோன்றி னேனே.  5 

 

 

பேச்சொடு பேச்சுக் கெல்லாம் 

  பிறர்தமைப் புறமே பேசக்

கூச்சிலே னாத லாலே 

  கொடுமையை விடுமா றோரேன்

நாச்சொலி நாளும் மூர்த்தி 

  நன்மையை யுணர மாட்டேன்

ஏச்சுளே நின்று மெய்யே 

  என்செய்வான் தோன்றி னேனே.  6 

 

 

தேசனைத் தேச மாகுந் 

  திருமாலோர் பங்கன் றன்னைப்

பூசனைப் புனிதன் றன்னைப் 

  புணரும்புண் டரிகத் தானை

நேசனை நெருப்பன் றன்னை 

  நிவஞ்சகத் தகன்ற செம்மை

ஈசனை அறிய மாட்டேன் 

  என்செய்வான் தோன்றி னேனே.  7 

 

 

விளைக்கின்ற வினையை நோக்கி 

  வெண்மயிர் விரவி மேலும்

முளைக்கின்ற வினையைப் போக 

  முயல்கிலேன் இயல வெள்ளந்

திளைக்கின்ற முடியி னான்றன் 

  திருவடி பரவ மாட்டா

திளைக்கின்றே னிருமி யூன்றி 

  என்செய்வான் தோன்றி னேனே.  8 

 

 

விளைவறி விலாமை யாலே 

  வேதனைக் குழியி லாழ்ந்து

களைகணு மில்லேன் எந்தாய் 

  காமரங் கற்று மில்லேன்

தளையவிழ் கோதை நல்லார் 

  தங்களோ டின்ப மெய்த

இளையனு மல்லேன் எந்தாய் 

  என்செய்வான் தோன்றி னேனே.  9 

 

 

வெட்டன வுடைய னாகி 

  வீரத்தால் மலை யெடுத்த

துட்டனைத் துட்டுத் தீர்த்துச் 

  சுவைப்படக் கீதங் கேட்ட

அட்டமா மூர்த்தி யாய 

  ஆதியை ஓதி நாளும்

எட்டனை எட்ட மாட்டேன் 

  என்செய்வான் தோன்றி னேனே.  10 

 

திருச்சிற்றம்பலம்