நான்காம்-திருமுறை

077 கடும்பகல் நட்ட

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

கடும்பகல் நட்ட மாடிக் 

  கையிலோர் கபால மேந்தி

இடும்பலிக் கில்லந் தோறு 

  முழிதரும் இறைவ னீரே

நெடும்பொறை மலையர் பாவை 

  நேரிழை நெறிமென் கூந்தற்

கொடுங்குழை புகுந்த வன்றுங் 

  கோவண மரைய தேயோ.  1 

 

 

கோவண முடுத்த வாறுங் 

  கோளர வசைத்த வாறுந்

தீவணச் சாம்பர் பூசித் 

  திருவுரு இருந்த வாறும்

பூவணக் கிழவ னாரைப் 

  புலியுரி அரைய னாரை

ஏவணச் சிலையி னாரை 

  யாவரே எழுது வாரே.  2 

 

 

விளக்கினாற் பெற்ற இன்பம் 

  மெழுக்கினாற் பதிற்றி யாகுந்

துளக்கில்நன் மலர்தொ டுத்தால் 

  தூயவிண் ணேற லாகும்

விளக்கிட்டார் பேறு சொல்லின் 

  மெய்ஞ்ஞெறி ஞான மாகும்

அளப்பில கீதஞ் சொன்னார்க் 

  கடிகள்தாம் அருளு மாறே.  3 

 

 

சந்திரற் சடையில் வைத்த 

  சங்கரன் சாம வேதி

அந்தரத் தமரர் பெம்மான் 

  ஆன்நல்வெள் ளூர்தி யான்றன்

மந்திரம் நமச்சி வாய 

  ஆகநீ றணியப் பெற்றால்

வெந்தறும் வினையும் நோயும் 

  வெவ்வழல் விறகிட் டன்றே.  4 

 

 

புள்ளுவர் ஐவர் கள்வர் 

  புனத்திடைப் புகுந்து நின்று

துள்ளுவர் சூறை கொள்வர் 

  தூநெறி விளைய வொட்டார்

முள்ளுடை யவர்கள் தம்மை 

  முக்கணான் பாத நீழல்

உள்ளிடை மறைந்து நின்றங் 

  குணர்வினா லெய்ய லாமே.  5 

 

 

தொண்டனேன் பிறந்து வாளாத் 

  தொல்வினைக் குழியில் வீழ்ந்து

பிண்டமே சுமந்து நாளும் 

  பெரியதோர் அவாவிற் பட்டேன்

அண்டனே அமரர் கோவே 

  அறிவனே அஞ்ச லென்னாய்

தெண்டிரைக் கங்கை சூடுந் 

  திகழ்தரு சடையி னானே.  6 

 

 

பாறினாய் பாவி நெஞ்சே 

  பன்றிபோல் அளற்றிற் பட்டுத்

தேறிநீ நினைதி யாயின் 

  சிவகதி திண்ண மாகும்

ஊறலே உவர்ப்பு நாறி 

  உதிரமே யொழுகும் வாசல்

கூறையால் மூடக் கண்டு 

  கோலமாக் கருதி னாயே.  7 

 

 

இப்பதிகத்தில் 8-ம் செய்யுட்கள் 

சிதைந்து போயின.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுட்கள் 

சிதைந்து போயின.  9 

 

 

உய்த்தகால் உதயத் தும்பர் 

  உமையவள் நடுக்கந் தீர

வைத்தகா லரக்க னோதன் 

  வான்முடி தனக்கு நேர்ந்தான்

மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கள் 

  மூர்த்தியெ னுச்சி தன்மேல்

வைத்தகால் வருந்து மென்று 

  வாடிநான் ஒடுங்கி னேனே.  10 

 

திருச்சிற்றம்பலம்