நான்காம்-திருமுறை

076 மருளவா மனத்த

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

மருளவா மனத்த னாகி 

  மயங்கினேன் மதியி லாதேன்

இருளவா அறுக்கும் எந்தை 

  இணையடி நீழ லென்னும்

அருளவாப் பெறுத லின்றி 

  அஞ்சிநான் அலமந் தேற்குப்

பொருளவாத் தந்த வாறே 

  போதுபோய்ப் புலர்ந்த தன்றே.  1 

 

 

மெய்ம்மையாம் உழவைச் செய்து 

  விருப்பெனும் வித்தை வித்திப்

பொய்ம்மையாங் களையை வாங்கிப் 

  பொறையெனும் நீரைப் பாய்ச்சித்

தம்மையும் நோக்கிக் கண்டு 

  தகவெனும் வேலி யிட்டுச்

செம்மையுள் நிற்ப ராகிற் 

  சிவகதி விளையு மன்றே.  2 

 

 

எம்பிரான் என்ற தேகொண் 

  டென்னுளே புகுந்து நின்றிங்

கெம்பிரான் ஆட்ட ஆடி 

  என்னுளே உழிதர் வேனை

எம்பிரான் என்னைப் பின்னைத் 

  தன்னுளே கரக்கு மென்றால்

எம்பிரான் என்னி னல்லால் 

  என்செய்கேன் ஏழை யேனே.  3 

 

 

காயமே கோயி லாகக் 

  கடிமனம் அடிமை யாக

வாய்மையே தூய்மை யாக 

  மனமணி இலிங்க மாக

நேயமே நெய்யும் பாலா 

  நிறையநீர் அமைய வாட்டிப்

பூசனை ஈச னார்க்குப் 

  போற்றவிக் காட்டி னோமே.  4 

 

 

வஞ்சகப் புலைய னேனை 

  வழியறத் தொண்டிற் பூட்டி

அஞ்சலென் றாண்டு கொண்டாய் 

  அதுவுநின் பெருமை யன்றே

நெஞ்சகங் கனிய மாட்டேன் 

  நின்னையுள் வைக்க மாட்டேன்

நஞ்சிடங் கொண்ட கண்டா 

  என்னென நன்மை தானே.  5 

 

 

நாயினுங் கடைப்பட் டேனை 

  நன்னெறி காட்டி ஆண்டாய்

ஆயிரம் அரவ மார்த்த 

  அமுதனே அமுத மொத்து

நீயுமென் னெஞ்சி னுள்ளே 

  நிலாவினாய் நிலாவி நிற்க

நோயவை சாரு மாகில் 

  நோக்கிநீ அருள்செய் வாயே.  6 

 

 

விள்ளத்தா னொன்று மாட்டேன் 

  விருப்பெனும் வேட்கை யாலே

வள்ளத்தேன் போல நுன்னை 

  வாய்மடுத் துண்டி டாமே

உள்ளத்தே நிற்றி யேனும் 

  உயிர்ப்புளே வருதி யேனுங்

கள்ளத்தே நிற்றி அம்மா 

  எங்ஙனங் காணு மாறே.  7 

 

 

ஆசைவன் பாச மெய்தி 

  அங்குற்றே னிங்குற் றேனாய்

ஊசலாட் டுண்டு வாளா 

  உழந்துநான் உழித ராமே

தேசனே தேச மூர்த்தி 

  திருமறைக் காடு மேய

ஈசனே உன்றன் பாதம் 

  ஏத்துமா றருளெம் மானே.  8 

 

 

நிறைவிலேன் நேச மில்லேன் 

  நினைவிலேன் வினையின் பாச

மறைவிலே புறப்பட் டேறும் 

  வகையெனக் கருளெ னெம்மான்

சிறையிலேன் செய்வ தென்னே 

  திருவடி பரவி யேத்தக்

குறைவிலேன் குற்றந் தீராய் 

  கொன்றைசேர் சடையி னானே.  9 

 

 

நடுவிலாக் காலன் வந்து 

  நணுகும்போ தறிய வொண்ணா

அடுவன அஞ்சு பூதம் 

  அவைதமக் காற்ற லாகேன்

படுவன பலவுங் குற்றம் 

  பாங்கிலா மனிதர் வாழ்க்கை

கெடுவதிப் பிறவி சீசீ 

  கிளரொளிச் சடையி னீரே.  10 

 

திருச்சிற்றம்பலம்