நான்காம்-திருமுறை

072 விண்ணவர் மகுட

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : இன்னம்பர்

திருச்சிற்றம்பலம்

 

விண்ணவர் மகுட கோடி 

  மிடைந்தசே வடியர் போலும்

பெண்ணொரு பாகர் போலும் 

  பேடலி யாணர் போலும்

வண்ணமால் அயனுங் காணா 

  மால்வரை எரியர் போலும்

எண்ணுரு வநேகர் போலும் 

  இன்னம்பர் ஈச னாரே.  1 

 

 

பன்னிய மறையர் போலும் 

  பாம்பரை யுடையர் போலுந்

துன்னிய சடையர் போலுந் 

  தூமதி மத்தர் போலும்

மன்னிய மழுவர் போலும் 

  மாதிடம் மகிழ்வர் போலும்

என்னையும் உடையர் போலும் 

  இன்னம்பர் ஈச னாரே.  2 

 

 

மறியொரு கையர் போலும் 

  மாதுமை யுடையர் போலும்

பறிதலைப் பிறவி நீக்கிப் 

  பணிகொள வல்லர் போலுஞ்

செறிவுடை அங்க மாலை 

  சேர்திரு வுருவர் போலும்

எறிபுனற் சடையர் போலும் 

  இன்னம்பர் ஈச னாரே.  3 

 

 

விடமலி கண்டர் போலும் 

  வேள்வியை அழிப்பர் போலுங்

கடவுநல் விடையர் போலுங் 

  காலனைக் காய்வர் போலும்

படமலி அரவர் போலும் 

  பாய்புலித் தோலர் போலும்

இடர்களைந் தருள்வர் போலும் 

  இன்னம்பர் ஈச னாரே.  4 

 

 

அளிமலர்க் கொன்றை துன்றும் 

  அவிர்சடை யுடையர் போலுங்

களிமயிற் சாய லோடுங் 

  காமனை விழிப்பர் போலும்

வெளிவளர் உருவர் போலும் 

  வெண்பொடி யணிவர் போலும்

எளியவர் அடியர்க் கென்றும் 

  இன்னம்பர் ஈச னாரே.  5 

 

 

கணையமர் சிலையர் போலுங் 

  கரியுரி உடையர் போலுந்

துணையமர் பெண்ணர் போலுந் 

  தூமணிக் குன்றர் போலும்

அணையுடை அடியர் கூடி 

  அன்பொடு மலர்கள் தூவும்

இணையடி உடையர் போலும் 

  இன்னம்பர் ஈச னாரே.  6 

 

 

பொருப்பமர் புயத்தர் போலும் 

  புனலணி சடையர் போலும்

மருப்பிள வாமை தாங்கு 

  மார்பில்வெண் ணூலர் போலும்

உருத்திர மூர்த்தி போலும் 

  உணர்விலார் புரங்கள் மூன்றும்

எரித்திடு சிலையர் போலும் 

  இன்னம்பர் ஈச னாரே.  7 

 

 

காடிடம் உடையர் போலுங் 

  கடிகுரல் விளியர் போலும்

வேடுரு வுடையர் போலும் 

  வெண்மதிக் கொழுந்தர் போலுங்

கோடலர் வன்னி தும்பை 

  கொக்கிற கலர்ந்த கொன்றை

ஏடமர் சடையர் போலும் 

  இன்னம்பர் ஈச னாரே.  8 

 

 

காறிடு விடத்தை யுண்ட 

  கண்டரெண் டோ ளர் போலும்

நீறுடை யுருவர் போலும் 

  நினைப்பினை அரியர் போலும்

பாறுடைத் தலைகை ஏந்திப் 

  பலிதிரிந் துண்பர் போலும்

ஏறுடைக் கொடியர் போலும் 

  இன்னம்பர் ஈச னாரே.  9 

 

 

ஆர்த்தெழு மிலங்கைக் கோனை 

  அருவரை அடர்ப்பர் போலும்

பார்த்தனோ டமர் பொருது 

  படைகொடுத் தருள்வர் போலுந்

தீர்த்தமாங் கங்கை தன்னைத் 

  திருச்சடை வைப்பர் போலும்

ஏத்தஏ ழுலகும் வைத்தார் 

  இன்னம்பர் ஈச னாரே. 10

திருச்சிற்றம்பலம்