நான்காம்-திருமுறை

067 வரைகிலேன் புலன்க

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : கொண்டீச்சரம்

திருச்சிற்றம்பலம்

 

வரைகிலேன் புலன்க ளைந்தும் 

  வரைகிலாப் பிறவி மாயப்

புரையிலே அடங்கி நின்று 

  புறப்படும் வழியுங் காணேன்

அரையிலே மிளிரு நாகத் 

  தண்ணலே அஞ்ச லென்னாய்

திரையுலாம் பழன வேலித் 

  திருக்கொண்டீச் சரத்து ளானே.  1 

 

 

தொண்டனேன் பிறந்து வாளா 

  தொல்வினைக் குழியில் வீழ்ந்து

பிண்டமே சுமந்து நைந்து 

  பேர்வதோர் வழியுங் காணேன்

அண்டனே அண்ட வாணா 

  அறிவனே அஞ்ச லென்னாய்

தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த 

  திருக்கொண்டீச் சரத்து ளானே.  2 

 

 

கால்கொடுத் தெலும்பு மூட்டிக் 

  கதிர்நரம் பாக்கை யார்த்துத்

தோலுடுத் துதிர மட்டித் 

  தொகுமயிர் மேய்ந்த கூரை

ஓலெடுத் துழைஞர் கூடி 

  ஒளிப்பதற் கஞ்சு கின்றேன்

சேலுடைப் பழனஞ் சூழ்ந்த 

  திருக்கொண்டீச் சரத்து ளானே.  3 

 

 

கூட்டமாய் ஐவர் வந்து 

  கொடுந்தொழிற் குணத்த ராகி

ஆட்டுவார்க் காற்ற கில்லேன் 

  ஆடர வசைத்த கோவே

காட்டிடை யரங்க மாக 

  ஆடிய கடவு ளேயோ

சேட்டிரும் பழன வேலித் 

  திருக்கொண்டீச் சரத்து ளானே.  4 

 

 

பொக்கமாய் நின்ற பொல்லாப் 

  புழுமிடை முடைகொள் ஆக்கை

தொக்குநின் றைவர் தொண்ணூற் 

  றறுவருந் துயக்க மெய்த

மிக்குநின் றிவர்கள் செய்யும் 

  வேதனைக் கலந்து போனேன்

செக்கரே திகழும் மேனித் 

  திருக்கொண்டீச் சரத்து ளானே.  5 

 

 

ஊனுலா முடைகொள் ஆக்கை 

  உடைகல மாவ தென்றும்

மானுலா மழைக்க ணார்தம் 

  வாழ்க்கையை மெய்யென் றெண்ணி

நானெலா மினைய கால 

  நண்ணிலேன் எண்ண மில்லேன்

தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த 

  திருக்கொண்டீச் சரத்து ளானே.  6 

 

 

சாணிரு மடங்கு நீண்ட 

  சழக்குடைப் பதிக்கு நாதர்

வாணிகர் ஐவர் தொண்ணூற் 

  றறுவரும் மயக்கஞ் செய்து

பேணிய பதியின் நின்று 

  பெயரும்போ தறிய மாட்டேன்

சேணுயர் மாட நீடு 

  திருக்கொண்டீச் சரத்து ளானே.  7 

 

 

பொய்ம்மறித் தியற்றி வைத்துப் 

  புலால்கமழ் பண்டம் பெய்து

பைம்மறித் தியற்றி யன்ன 

  பாங்கிலாக் குரம்பை நின்று

கைம்மறித் தனைய வாவி 

  கழியும்போ தறிய மாட்டேன்

செந்நெறிச் செலவு காணேன் 

  திருக்கொண்டீச் சரத்து ளானே.  8 

 

 

பாலனாய்க் கழிந்த நாளும் 

  பனிமலர்க் கோதை மார்தம்

மேலனாய்க் கழிந்த நாளும் 

  மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்த நாளுங் 

  குறிக்கோளி லாது கெட்டேன்

சேலுலாம் பழன வேலித் 

  திருக்கொண்டீச் சரத்து ளானே.  9 

 

 

விரைதரு கருமென் கூந்தல் 

  விளங்கிழை வேலொண் கண்ணாள்

வெருவர இலங்கைக் கோமான் 

  விலங்கலை எடுத்த ஞான்று

பருவரை யனைய தோளும் 

  முடிகளும் பாறி வீழத்

திருவிர லூன்றி னானே 

  திருக்கொண்டீச் சரத்து ளானே. 10

 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

காக புஜண்டர்
View Details
ரசவாதம் புரிதல்
View Details
ஏனாதிநாத நாயனார்
View Details