நான்காம்-திருமுறை

062 வேதியா வேத

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : ஆலவாய் (மதுரை)

திருச்சிற்றம்பலம்

 

வேதியா வேத கீதா 

  விண்ணவர் அண்ணா என்றென்

றோதியே மலர்கள் தூவி 

  ஒருங்கிநின் கழல்கள் காணப்

பாதியோர் பெண்ணை வைத்தாய் 

  படர்சடை மதியஞ் சூடும்

ஆதியே ஆல வாயில் 

  அப்பனே அருள்செ யாயே.  1 

 

 

நம்பனே நான்மு கத்தாய் 

  நாதனே ஞான மூர்த்தி

என்பொனே ஈசா என்றென் 

  றேத்திநான் ஏசற் றென்றும்

பின்பினே திரிந்து நாயேன் 

  பேர்த்தினிப் பிறவா வண்ணம்

அன்பனே ஆலவாயில் அப்பனே 

  அருள் செயாயே.  2 

 

 

ஒருமருந் தாகி யுள்ளாய் 

  உம்பரோ டுலகுக் கெல்லாம்

பெருமருந் தாகி நின்றாய் 

  பேரமு தின்சு வையாய்க்

கருமருந் தாகி யுள்ளாய் 

  ஆளும்வல் வினைகள் தீர்க்கும்

அருமருந் தால வாயில் 

  அப்பனே அருள்செ யாயே.  3 

 

 

செய்யநின் கமல பாதஞ் 

  சேருமா தேவர் தேவே

மையணி கண்டத் தானே 

  மான்மறி மழுவொன் றேந்துஞ்

சைவனே சால ஞானங் 

  கற்றறி விலாத நாயேன்

ஐயனே ஆல வாயில் 

  அப்பனே அருள்செ யாயே.  4 

 

 

வெண்டலை கையி லேந்தி 

  மிகவுமூர் பலிகொண் டென்றும்

உண்டது மில்லை சொல்லில் 

  உண்டது நஞ்சு தன்னைப்

பண்டுனை நினைய மாட்டாப் 

  பளகனேன் உளம தார

அண்டனே ஆல வாயில் 

  அப்பனே அருள்செ யாயே.  5 

 

 

எஞ்சலில் புகலி தென்றென் 

  றேத்திநான் ஏசற் றென்றும்

வஞ்சக மொன்று மின்றி 

  மலரடி காணும் வண்ணம்

நஞ்சினை மிடற்றில் வைத்த 

  நற்பொருட் பதமே நாயேற்

கஞ்சலென் றால வாயில் 

  அப்பனே அருள்செ யாயே.  6 

 

 

வழுவிலா துன்னை வாழ்த்தி 

  வழிபடுந் தொண்ட னேன்உன்

செழுமலர்ப் பாதங் காணத் 

  தெண்டிரை நஞ்ச முண்ட

குழகனே கோல வில்லீ 

  கூத்தனே மாத்தா யுள்ள

அழகனே ஆல வாயில் 

  அப்பனே அருள்செ யாயே.  7 

 

 

நறுமலர் நீருங் கொண்டு 

  நாடொறு மேத்தி வாழ்த்திச்

செறிவன சித்தம் வைத்துத் 

  திருவடி சேரும் வண்ணம்

மறிகடல் வண்ணன் பாகா 

  மாமறை யங்க மாறும்

அறிவனே ஆல வாயில் 

  அப்பனே அருள்செ யாயே.  8 

 

 

நலந்திகழ் வாயின் நூலாற் 

  சருகிலைப் பந்தர் செய்த

சிலந்தியை அரச தாள 

  அருளினாய் என்று திண்ணங்

கலந்துடன் வந்து நின்றாள் 

  கருதிநான் காண்ப தாக

அலந்தனன் ஆல வாயில் 

  அப்பனே அருள்செ யாயே.  9 

 

 

பொடிக்கொடு பூசிப் பொல்லாக் 

  குரம்பையிற் புந்தி யொன்றிப்

பிடித்துநின் றாள்க ளென்றும் 

  பிதற்றிநா னிருக்க மாட்டேன்

எடுப்பனென் றிலங்கைக் கோன்வந் 

  தெடுத்தலும் இருப துதோள்

அடர்த்தனே ஆல வாயில் 

  அப்பனே அருள்செ யாயே. 10

 

திருச்சிற்றம்பலம்