நான்காம்-திருமுறை

056 மாயிரு ஞால

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : ஆவடுதுறை

திருச்சிற்றம்பலம்

 

மாயிரு ஞால மெல்லாம் 

  மலரடி வணங்கும் போலும்

பாயிருங் கங்கை யாளைப் 

  படர்சடை வைப்பர் போலுங்

காயிரும் பொழில்கள் சூழ்ந்த 

  கழுமல வூரர்க் கம்பொன்

ஆயிரங் கொடுப்பர் போலும் 

  ஆவடு துறைய னாரே.  1 

 

 

மடந்தை பாகத்தர் போலும் 

  மான்மறிக் கையர் போலும்

குடந்தையிற் குழகர் போலுங் 

  கொல்புலித் தோலர் போலுங்

கடைந்தநஞ் சுண்பர் போலுங் 

  காலனைக் காய்வர் போலும்

அடைந்தவர்க் கன்பர் போலும் 

  ஆவடு துறைய னாரே.  2 

 

 

உற்றநோய் தீர்ப்பர் போலும் 

  உறுதுணை யாவர் போலுஞ்

செற்றவர் புரங்கள் மூன்றுந் 

  தீயெழச் செறுவர் போலுங்

கற்றவர் பரவி யேத்தக் 

  கலந்துலந் தலந்து பாடும்

அற்றவர்க் கன்பர் போலும் 

  ஆவடு துறைய னாரே.  3 

 

 

மழுவமர் கையர் போலும் 

  மாதவள் பாகர் போலும்

எழுநுனை வேலர் போலும் 

  என்புகொண் டணிவர் போலுந்

தொழுதெழுந் தாடிப் பாடித் 

  தோத்திரம் பலவுஞ் சொல்லி

அழுமவர்க் கன்பர் போலும் 

  ஆவடு துறைய னாரே.  4 

 

 

பொடியணி மெய்யர் போலும் 

  பொங்குவெண் ணூலர் போலுங்

கடியதோர் விடையர் போலுங் 

  காமனைக் காய்வர் போலும்

வெடிபடு தலையர் போலும் 

  வேட்கையாற் பரவுந் தொண்டர்

அடிமையை அளப்பர் போலும் 

  ஆவடு துறைய னாரே.  5 

 

 

வக்கரன் உயிரை வவ்வக் 

  கண்மலர் கொண்டு போற்றச்

சக்கரங் கொடுப்பர் போலுந் 

  தானவர் தலைவர் போலுந்

துக்கமா மூடர் தம்மைத் 

  துயரிலே வீழ்ப்பர் போலும்

அக்கரை ஆர்ப்பர் போலும் 

  ஆவடு துறைய னாரே.  6 

 

 

விடைதரு கொடியர் போலும் 

  வெண்புரி நூலர் போலும்

படைதரு மழுவர் போலும் 

  பாய்புலித் தோலர் போலும்

உடைதரு கீளர் போலும் 

  உலகமு மாவர் போலும்

அடைபவர் இடர்கள் தீர்க்கும் 

  ஆவடு துறைய னாரே.  7 

 

 

முந்திவா னோர்கள் வந்து 

  முறைமையால் வணங்கி யேத்த

நந்திமா காள ரென்பார் 

  நடுவுடை யார்கள் நிற்பச்

சிந்தியா தேயொ ழிந்தார் 

  திரிபுரம் எரிப்பர் போலும்

அந்திவான் மதியஞ் சூடும் 

  ஆவடு துறைய னாரே.  8 

 

 

பானமர் ஏன மாகிப் 

  பாரிடந் திட்ட மாலுந்

தேனமர்ந் தேறும் அல்லித் 

  திசைமுக முடைய கோவுந்

தீனரைத் தியக் கறுத்த 

  திருவுரு வுடையர் போலும்

ஆனரை ஏற்றர் போலும் 

  ஆவடு துறைய னாரே.  9 

 

 

பார்த்தனுக் கருள்வர் போலும் 

  படர்சடை முடியர் போலும்

ஏத்துவார் இடர்கள் தீர 

  இன்பங்கள் கொடுப்பர் போலுங்

கூத்தராய்ப் பாடி யாடிக் 

  கொடுவலி யரக்கன் றன்னை

ஆர்த்தவாய் அலறு விப்பார் 

  ஆவடு துறைய னாரே. 10

 

திருச்சிற்றம்பலம்