நான்காம்-திருமுறை

055 தெண்டிரை தேங்கி

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : வலம்புரம்

திருச்சிற்றம்பலம்

 

தெண்டிரை தேங்கி ஓதஞ் 

  சென்றடி வீழுங் காலைத்

தொண்டிரைத் தண்டர் கோனைத் 

  தொழுதடி வணங்கி யெங்கும்

வண்டுகள் மதுக்கள் மாந்தும் 

  வலம்புரத் தடிகள் தம்மைக்

கொண்டுநற் கீதம் பாடக் 

  குழகர்தாம் இருந்த வாறே.  1 

 

 

மடுக்களில் வாளை பாய 

  வண்டினம் இரிந்த பொய்கைப்

பிடிக்களி றென்னத் தம்மிற் 

  பிணைபயின் றணைவ ரால்கள்

தொடுத்தநன் மாலை ஏந்தித் 

  தொண்டர்கள் பரவி யேத்த

வடித்தடங் கண்ணி பாகர் 

  வலம்புரத் திருந்த வாறே.  2 

 

 

தேனுடை மலர்கள் கொண்டு 

  திருந்தடி பொருந்தச் சேர்த்தி

ஆனிடை அஞ்சுங் கொண்டே 

  அன்பினால் அமர வாட்டி

வானிடை மதியஞ் சூடும் 

  வலம்புரத் தடிகள் தம்மை

நானடைந் தேத்தப் பெற்று 

  நல்வினைப் பயனுற் றேனே.  3 

 

 

முளைஎயிற் றிளநல் ஏனம் 

  பூண்டுமொய் சடைகள் தாழ

வளைஎயிற் றிளைய நாகம் 

  வலித்தரை யிசைய வீக்கிப்

புளைகய போர்வை போர்த்துப் 

  புனலொடு மதியஞ் சூடி

வளைபயில் இளைய ரேத்தும் 

  வலம்புரத் தடிகள் தாமே.  4 

 

 

சுருளுறு வரையின் மேலாற் 

  றுளங்கிளம் பளிங்கு சிந்த

இருளுறு கதிர்நு ழைந்த 

  இளங்கதிர்ப் பசலைத் திங்கள்

அருளுறும் அடிய ரெல்லாம் 

  அங்கையின் மலர்கள் ஏந்த

மருளுறு கீதங் கேட்டார் 

  வலம்புரத் தடிக ளாரே.  5 

 

 

நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால் 

  நீண்டபுன் சடையி னானே

அனைத்துடன் கொண்டு வந்தங் 

  கன்பினால் அமைய வாட்டிப்

புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை 

  மெய்ம்மையைப் புணர மாட்டேன்

எனக்குநான் செய்வ தென்னே 

  இனிவலம் புரவ னீரே.  6 

 

 

செங்கயல் சேல்கள் பாய்ந்து 

  தேம்பழ மினிய நாடித்

தங்கயந் துறந்து போந்து 

  தடம்பொய்கை அடைந்து நின்று

கொங்கையர் குடையுங் காலைக் 

  கொழுங்கனி யழுங்கி னாராம்

மங்கல மனையின் மிக்கார் 

  வலம்புரத் தடிக ளாரே.  7 

 

 

அருகெலாங் குவளை செந்நெல் 

  அகவிலை யாம்பல் நெய்தல்

தெருவெலாந் தெங்கு மாவும் 

  பழம்விழும் படப்பை யெல்லாங்

குருகினங் கூடி யாங்கே 

  கும்மலித் திறகு லர்த்தி

மருவலா மிடங்கள் காட்டும் 

  வலம்புரத் தடிக ளாரே.  8 

 

 

கருவரை யனைய மேனிக் 

  கடல்வண்ண னவனுங் காணான்

திருவரை யனைய பூமேல் 

  திசைமுக னவனுங் காணான்

ஒருவரை உச்சி ஏறி 

  ஓங்கினார் ஓங்கி வந்து

அருமையில் எளிமை யானார் 

  அவர்வலம் புரவ னாரே.  9 

 

 

வாளெயி றிலங்க நக்கு 

  வளர்கயி லாயந் தன்னை

ஆள்வலி கருதிச் சென்ற 

  அரக்கனை வரைக்கீ ழன்று

தோளொடு பத்து வாயுந் 

  தொலைந்துடன் அழுந்த வூன்றி

ஆண்மையும் வலியுந் தீர்ப்பார் 

  அவர்வலம் புரவ னாரே. 10

 

 

திருச்சிற்றம்பலம்