நான்காம்-திருமுறை

049 ஆதியிற் பிரம

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : குறுக்கை வீரட்டம்

திருச்சிற்றம்பலம்

 

ஆதியிற் பிரம னார்தாம் 

  அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்

ஓதிய வேத நாவர் 

  உணருமா றுணர லுற்றார்

சோதியுட் சுடராய்த் தோன்றிச் 

  சொல்லினை யிறந்தார் பல்பூக்

கோதிவண் டறையுஞ் சோலைக் 

  குறுக்கைவீ ரட்ட னாரே.  1 

 

 

நீற்றினை நிறையப் பூசி 

  நித்தலும் நியமஞ் செய்து

ஆற்றுநீர் பூரித் தாட்டும் 

  அந்தண னாரைக் கொல்வான்

சாற்றுநாள் அற்ற தென்று 

  தருமரா சற்காய் வந்த

கூற்றினைக் குமைப்பர் போலுங் 

  குறுக்கைவீ ரட்ட னாரே.  2 

 

 

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் 

  தாபர மணலாற் கூப்பி

அழைத்தங்கே ஆவின் பாலைக் 

  கறந்துகொண் டாட்டக் கண்டு

பிழைத்ததன் றாதை தாளைப் 

  பெருங்கொடு மழுவால் வீசக்

குழைத்ததோர் அமுதம் ஈந்தார் 

  குறுக்கைவீ ரட்ட னாரே.  3 

 

 

சிலந்தியும் ஆனைக் காவிற் 

  திருநிழற் பந்தர் செய்து

உலந்தவண் இறந்த போதே

  கோச்செங்க ணானு மாகக்

கலந்தநீர்க் காவி ரிசூழ் 

  சோணாட்டுச் சோழர் தங்கள்

குலந்தனிற் பிறப்பித் திட்டார் 

  குறுக்கைவீ ரட்ட னாரே.  4 

 

 

ஏறுடன் ஏழ டர்த்தான் 

  எண்ணியா யிரம்பூக் கொண்டு

ஆறுடைச் சடையி னானை 

  அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்

வேறுமோர் பூக்கு றைய 

  மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்

கூறுமோர் ஆழி ஈந்தார் 

  குறுக்கைவீ ரட்ட னாரே.  5 

 

 

கல்லினால் எறிந்து கஞ்சி 

  தாமுணுஞ் சாக்கி யனார்

நெல்லினார் சோறு ணாமே 

  நீள்விசும் பாள வைத்தார்

எல்லியாங் கெரிகை ஏந்தி 

  எழில்திகழ் நட்ட மாடிக்

கொல்லியாம் பண்ணு கந்தார் 

  குறுக்கைவீ ரட்ட னாரே.  6 

 

 

காப்பதோர் வில்லும் அம்புங் 

  கையதோர் இறைச்சிப் பாரந்

தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் 

  தூயவாய்க் கலசம் ஆட்டித்

தீப்பெருங் கண்கள் செய்யக் 

  குருதிநீர் ஒழுகத் தன்கண்

கோப்பதும் பற்றிக் கொண்டார் 

  குறுக்கைவீ ரட்ட னாரே.  7 

 

 

நிறைமறைக் காடு தன்னில் 

  நீண்டெரி தீபந் தன்னைக்

கறைநிறத் தெலிதன் மூக்குச் 

  சுட்டிடக் கனன்று தூண்ட

நிறைகடல் மண்ணும் விண்ணும் 

  நீண்டவா னுலக மெல்லாங்

குறைவறக் கொடுப்பர் போலுங் 

  குறுக்கைவீ ரட்ட னாரே.  8 

 

 

அணங்குமை பாக மாக 

  அடக்கிய ஆதி மூர்த்தி

வணங்குவார் இடர்கள் தீர்க்கும் 

  மருந்துநல் அருந்த வத்த

கணம்புல்லர்க் கருள்கள் செய்து 

  காதலாம் அடியார்க் கென்றுங்

குணங்களைக் கொடுப்பர் போலுங் 

  குறுக்கைவீ ரட்ட னாரே.  9 

 

 

எடுத்தனன் எழிற் கயிலை 

  இலங்கையர் மன்னன் தன்னை

அடுத்தொரு விரலால் ஊன்ற 

  அலறிப்போய் அவனும் வீழ்ந்து

விடுத்தனன் கைந ரம்பால் 

  வேதகீ தங்கள் பாடக்

கொடுத்தனர் கொற்ற வாணாள் 

  குறுக்கைவீ ரட்ட னாரே. 10

 

திருச்சிற்றம்பலம்