நான்காம்-திருமுறை

045 வெள்ளத்தைச் சடையில்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : ஒற்றியூர்

திருச்சிற்றம்பலம்

 

வெள்ளத்தைச் சடையில் வைத்த 

  வேதகீ தன்றன் பாதம்

மெள்ளத்தான் அடைய வேண்டின் 

  மெய்தரு ஞானத் தீயாற்

கள்ளத்தைக் கழிய நின்றார் 

  காயத்துக் கலந்து நின்று

உள்ளத்துள் ஒளியு மாகும் 

  ஒற்றியூ ருடைய கோவே.  1 

 

 

வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா 

  வானவர் இறைவன் நின்று

புசிப்பதோர் பொள்ள லாக்கை 

  யதனொடும் புணர்வு வேண்டில்

அசிர்ப்பெனும் அருந்த வத்தால் 

  ஆன்மாவி னிடம தாகி

உசிர்ப்பெனும் உணர்வு முள்ளார் 

  ஒற்றியூ ருடைய கோவே.  2 

 

 

தானத்தைச் செய்து வாழ்வான் 

  சலத்துளே அழுந்து கின்றீர்

வானத்தை வணங்க வேண்டில் 

  வம்மின்கள் வல்லீ ராகில்

ஞானத்தை விளக்கை ஏற்றி 

  நாடியுள் விரவ வல்லார்

ஊனத்தை ஒழிப்பர் போலும் 

  ஒற்றியூ ருடைய கோவே.  3 

 

 

காமத்துள் அழுந்தி நின்று 

  கண்டரால் ஒறுப்புண் ணாதே

சாமத்து வேத மாகி 

  நின்றதோர் சயம்பு தன்னை

ஏமத்தும் இடையி ராவும் 

  ஏகாந்தம் இயம்பு வார்க்கு

ஓமத்துள் ஒளிய தாகும் 

  ஒற்றியூ ருடைய கோவே.  4 

 

 

சமையமே லாறு மாகித் 

  தானொரு சயம்பு வாகி

இமையவர் பரவி யேத்த 

  இனிதினங் கிருந்த ஈசன்

கமையினை யுடைய ராகிக் 

  கழலடி பரவு வார்க்கு

உமையொரு பாகர் போலும் 

  ஒற்றியூ ருடைய கோவே.  5 

 

 

ஒருத்திதன் றலைச்சென் றாளைக் 

  கரந்திட்டான் உலக மேத்த

ஒருத்திக்கு நல்ல னாகி 

  மறுப்படுத் தொளித்து மீண்டே

ஒருத்தியைப் பாகம் வைத்தான் 

  உணர்வினால் ஐயம் உண்ணி

ஒருத்திக்கு நல்ல னல்லன் 

  ஒற்றியூ ருடைய கோவே.  6 

 

 

பிணமுடை உடலுக் காகப் 

  பித்தராய்த் திரிந்து நீங்கள்

புணர்வெனும் போகம் வேண்டா 

  போக்கலாம் பொய்யை நீங்க

நிணமுடை நெஞ்சி னுள்ளால் 

  நினைக்குமா நினைக்கின் றார்க்கு

உணர்வினோ டிருப்பர் போலும் 

  ஒற்றியூ ருடைய கோவே.  7 

 

 

பின்னுவார் சடையான் தன்னைப் 

  பிதற்றிலாப் பேதை மார்கள்

துன்னுவார் நரகந் தன்னுள் 

  தொல்வினை தீர வேண்டின்

மன்னுவான் மறைக ளோதி 

  மனத்தினுள் விளக்கொன் றேற்றி

உன்னுவார் உள்ளத் துள்ளார் 

  ஒற்றியூ ருடைய கோவே.  8 

 

 

முள்குவார் போகம் வேண்டின் 

  முயற்றியா லிடர்கள் வந்தால்

எள்குவார் எள்கி நின்றங் 

  கிதுவொரு மாய மென்பார்

பள்குவார் பத்த ராகிப் 

  பாடியு மாடி நின்று

உள்குவார் உள்ளத் துள்ளார் 

  ஒற்றியூ ருடைய கோவே.  9 

 

 

வெறுத்துகப் புலன்க ளைந்தும் 

  வேண்டிற்று வேண்டு நெஞ்சே

மறுத்துக ஆர்வச் செற்றக் 

  குரோதங்க ளான மாயப்

பொறுத்துகப் புட்ப கத்தேர் 

  உடையானை அடர வூன்றி

ஒறுத்துகந் தருள்கள் செய்தார் 

  ஒற்றியூ ருடைய கோவே. 10

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

ஸ்ரீ வல்லப சித்தர் (சுந்தரானந்ததேவர்)
View Details
மேருவிலிருந்து பொன் பறித்தல்
View Details
கௌரியின் துயர் தீர்த்தல்
View Details