நான்காம்-திருமுறை

042 பொருத்திய குரம்பை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : துருத்தி

திருச்சிற்றம்பலம்

 

பொருத்திய குரம்பை தன்னைப் 

  பொருளெனக் கருத வேண்டா

இருத்தியெப் பொழுதும் நெஞ்சுள் 

  இறைவனை ஏத்து மின்கள்

ஒருத்தியைப் பாகம் வைத்தங் 

  கொருத்தியைச் சடையில் வைத்த

துருத்தியஞ் சுடரி னானைத் 

  தொண்டனேன் கண்ட வாறே.  1 

 

 

சவைதனைச் செய்து வாழ்வான் 

  சலத்துளே யழுந்து கின்ற

இவையொரு பொருளு மல்ல 

  இறைவனை ஏத்து மின்னோ

அவைபுர மூன்றும் எய்தும் 

  அடியவர்க் கருளிச் செய்த

சுவையினைத் துருத்தி யானைத் 

  தொண்டனேன் கண்ட வாறே.  2 

 

 

உன்னியெப் போதும் நெஞ்சுள் 

  ஒருவனை ஏத்து மின்னோ

கன்னியை ஒருபால் வைத்துக் 

  கங்கையைச் சடையுள் வைத்துப்

பொன்னியின் நடுவு தன்னுள் 

  பூம்புனல் பொலிந்து தோன்றுந்

துன்னிய துருத்தி யானைத் 

  தொண்டனேன் கண்ட வாறே.  3 

 

 

ஊன்றலை வலிய னாகி 

  உலகத்துள் உயிர்கட் கெல்லாந்

தான்றலைப் பட்டு நின்று 

  சார்கன லகத்து வீழ

வான்றலைத் தேவர் கூடி 

  வானவர்க் கிறைவா வென்னுந்

தோன்றலைத் துருத்தி யானைத் 

  தொண்டனேன் கண்ட வாறே.  4 

 

 

உடல்தனைக் கழிக்க லுற்ற 

  உலகத்துள் உயிர்கட் கெல்லாம்

இடர்தனைக் கழிக்க வேண்டில் 

  இறைவனை ஏத்து மின்னோ

கடல்தனில் நஞ்ச முண்டு 

  காண்பரி தாகி நின்ற

சுடர்தனைத் துருத்தி யானைத் 

  தொண்டனேன் கண்ட வாறே.  5 

 

 

அள்ளலைக் கடக்க வேண்டில் 

  அரனையே நினைமி னீர்கள்

பொள்ளலிக் காயந் தன்னுட் 

  புண்டரீ கத்தி ருந்த

வள்ளலை வான வர்க்குங் 

  காண்பரி தாகி நின்ற

துள்ளலைத் துருத்தி யானைத் 

  தொண்டனேன் கண்ட வாறே.  6 

 

 

பாதியில் உமையாள் தன்னைப் 

  பாகமா வைத்த பண்பன்

வேதியன் என்று சொல்லி 

  விண்ணவர் விரும்பி ஏத்தச்

சாதியாஞ் சதுர்மு கனுஞ் 

  சக்கரத் தானுங் காணாச்

சோதியைத் துருத்தி யானைத் 

  தொண்டனேன் கண்ட வாறே.  7 

 

 

சாமனை வாழ்க்கை யான 

  சலத்துளே யழுந்த வேண்டா

தூமநல் லகிலுங் காட்டித் 

  தொழுதடி வணங்கு மின்னோ

சோமனைச் சடையுள் வைத்துத் 

  தொன்னெறி பலவுங் காட்டுந்

தூமனத் துருத்தி யானைத் 

  தொண்டனேன் கண்ட வாறே.  8 

 

 

குண்டரே சமணர் புத்தர் 

  குறியறி யாது நின்று

கண்டதே கருது வார்கள் 

  கருத்தெண்ணா தொழிமி னீர்கள்

விண்டவர் புரங்கள் எய்து 

  விண்ணவர்க் கருள்கள் செய்த

தொண்டர்கள் துணையி னானைத் 

  துருத்திநான் கண்ட வாறே.  9 

 

 

பிண்டத்தைக் கழிக்க வேண்டிற் 

  பிரானையே பிதற்று மின்கள்

அண்டத்தைக் கழிய நீண்ட 

  அடலரக் கன்றன் ஆண்மை

கண்டொத்துக் கால்வி ரலால் 

  ஊன்றிமீண் டருளிச் செய்த

துண்டத்துத் துருத்தி யானைத் 

  தொண்டனேன் கண்ட வாறே. 10

 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

திருவாதவூரருக்கு உபதேசித்தல்
View Details
அந்தணப் பெண்ணின் கொலையைக் கண்டுபிடித்தல்
View Details
சாக்கிய நாயனார்
View Details