நான்காம்-திருமுறை

041 பொய்விரா மேனி

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : சோற்றுத்துறை

திருச்சிற்றம்பலம்

 

பொய்விரா மேனி தன்னைப் 

  பொருளெனக் காலம் போக்கி

மெய்விரா மனத்த னல்லேன் 

  வேதியா வேத நாவா

ஐவரால் அலைக்கப் பட்ட 

  ஆக்கைகொண் டயர்த்துப் போனேன்

செய்வரால் உகளுஞ் செம்மைத் 

  திருச்சோற்றுத் துறைய னாரே.  1 

 

 

கட்டராய் நின்று நீங்கள் 

  காலத்தைக் கழிக்க வேண்டா

எட்டவாங் கைகள் வீசி 

  எல்லிநின் றாடு வானை

அட்டமா மலர்கள் கொண்டே 

  ஆனஞ்சும் ஆட்ட ஆடிச்

சிட்டராய் அருள்கள் செய்வார் 

  திருச்சோற்றுத் துறைய னாரே.  2 

 

 

கல்லினாற் புரமூன் றெய்த 

  கடவுளைக் காத லாலே

எல்லியும் பகலு முள்ளே 

  ஏகாந்த மாக ஏத்தும்

பல்லில்வெண் டலைகை யேந்திப் 

  பல்லிலந் திரியுஞ் செல்வர்

சொல்லுநன் பொருளு மாவார் 

  திருச்சோற்றுத் துறைய னாரே.  3 

 

 

கறையராய்க் கண்ட நெற்றிக் 

  கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்

இறையராய் இனிய ராகித் 

  தனியராய்ப் பனிவெண் டிங்கட்

பிறையராய்ச் செய்த வெல்லாம் 

  பீடராய்க் கேடில் சோற்றுத்

துறையராய்ப் புகுந்தெ னுள்ளச் 

  சோர்வுகண் டருளி னாரே.  4 

 

 

பொந்தையைப் பொருளா வெண்ணிப் 

  பொருக்கெனக் காலம் போனேன்

எந்தையே ஏக மூர்த்தி 

  யென்றுநின் றேத்த மாட்டேன்

பந்தமாய் வீடு மாகிப் 

  பரம்பர மாகி நின்று

சிந்தையுட் டேறல் போலுந் 

  திருச்சோற்றுத் துறைய னாரே.  5 

 

 

பேர்த்தினிப் பிறவா வண்ணம் 

  பிதற்றுமின் பேதை பங்கன்

பார்த்தனுக் கருள்கள் செய்த 

  பாசுப தன்றி றமே

ஆர்த்துவந் திழிவ தொத்த 

  அலைபுனற் கங்கை யேற்றுத்

தீர்த்தமாய்ப் போத விட்டார் 

  திருச்சோற்றுத் துறைய னாரே.  6 

 

 

கொந்தார்பூங் குழலி னாரைக் 

  கூறியே காலம் போன

எந்தையெம் பிரானாய் நின்ற 

  இறைவனை ஏத்தா தந்தோ

முந்தரா அல்கு லாளை 

  யுடன்வைத்த ஆதி மூர்த்தி

செந்தாது புடைகள் சூழ்ந்த 

  திருச்சோற்றுத் துறைய னாரே.  7 

 

 

அங்கதி ரோன வனை 

  அண்ணலாக் கருத வேண்டா

வெங்கதி ரோன் வழியே 

  போவதற் கமைந்து கொண்மின்

அங்கதி ரோன வனை 

  யுடன்வைத்த ஆதி மூர்த்தி

செங்கதி ரோன்வ ணங்குஞ் 

  திருச்சோற்றுத் துறைய னாரே.  8 

 

 

ஓதியே கழிக்கின் றீர்கள் 

  உலகத்தீர் ஒருவன் றன்னை

நீதியால் நினைய மாட்டீர் 

  நின்மலன் என்று சொல்லீர்

சாதியா நான்மு கனுஞ் 

  சக்கரத் தானுங் காணாச்

சோதியாய்ச் சுடர தானார் 

  திருச்சோற்றுத் துறைய னாரே.  9 

 

 

மற்றுநீர் மனம்வை யாதே 

  மறுமையைக் கழிக்க வேண்டிற்

பெற்றதோர் உபாயந் தன்னாற் 

  பிரானையே பிதற்று மின்கள்

கற்றுவந் தரக்க னோடிக் 

  கயிலாய மலைஎ டுக்கச்

செற்றுகந் தருளிச் செய்தார் 

  திருச்சோற்றுத் துறைய னாரே. 10

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

சோமாசி மாற நாயானார்
View Details
சாவளிகே சிவலிங்கேஸ்வர சித்தர்
View Details
மதுரை நகர் அமைத்தல்
View Details