நான்காம்-திருமுறை

039 குண்டனாய்ச் சமண

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : ஐயாறு

திருச்சிற்றம்பலம்

 

குண்டனாய்ச் சமண ரோடே 

  கூடிநான் கொண்ட மாலைத்

துண்டனே சுடர்கொள் சோதீ 

  தூநெறி யாகி நின்ற

அண்டனே அமரர் ஏறே 

  திருவையா றமர்ந்த தேனே

தொண்டனேன் தொழுதுன் பாதஞ் 

  சொல்லிநான் திரிகின் றேனே.  1 

 

 

பீலிகை இடுக்கி நாளும் 

  பெரியதோர் தவமென் றெண்ணி

வாலிய தறிகள் போல 

  மதியிலார் பட்ட தென்னே

வாலியார் வணங்கி ஏத்துந் 

  திருவையா றமர்ந்த தேனோ

டாலியா எழுந்த நெஞ்சம் 

  அழகிதா எழுந்த வாறே.  2 

 

 

தட்டிடு சமண ரோடே 

  தருக்கிநான் தவமென் றெண்ணி

ஒட்டிடு மனத்தி னீரே 

  உம்மையான் செய்வ தென்னே

மொட்டிடு கமலப் பொய்கைத் 

  திருவையா றமர்ந்த தேனோ

டொட்டிடும் உள்ளத் தீரே 

  உம்மைநான் உகந்திட் டேனே.  3 

 

 

பாசிப்பல் மாசு மெய்யர் 

  பலமிலாச் சமண ரோடு

நேசத்தா லிருந்த நெஞ்சை 

  நீக்குமா றறிய மாட்டேன்

தேசத்தார் பரவி யேத்துந் 

  திருவையா றமர்ந்த தேனை

வாசத்தால் வணங்க வல்லார் 

  வல்வினை மாயு மன்றே.  4 

 

 

கடுப்பொடி யட்டி மெய்யிற் 

  கருதியோர் தவமென் றெண்ணி

வடுக்களோ டிசைந்த நெஞ்சே 

  மதியிலி பட்ட தென்னே

மடுக்களில் வாளை பாயுந் 

  திருவையா றமர்ந்த தேனை

அடுத்துநின் றுன்னு நெஞ்சே 

  அருந்தவஞ் செய்த வாறே.  5 

 

 

துறவியென் றவம தோரேன் 

  சொல்லிய செலவு செய்து

உறவினால் அமண ரோடும் 

  உணர்விலேன் உணர்வொன் றின்றி

நறவமார் பொழில்கள் சூழ்ந்த 

  திருவையா றமர்ந்த தேனை

மறவிலா நெஞ்ச மேநன் 

  மதியுனக் கடைந்த வாறே.  6 

 

 

பல்லுரைச் சமண ரோடே 

  பலபல கால மெல்லாஞ்

சொல்லிய செலவு செய்தேன் 

  சோர்வனான் நினைந்த போது

மல்லிகை மலருஞ் சோலைத் 

  திருவையா றமர்ந்த தேனை

எல்லியும் பகலு மெல்லாம் 

  நினைந்தபோ தினிய வாறே.  7 

 

 

மண்ணுளார் விண்ணு ளாரும் 

  வணங்குவார் பாவம் போக

எண்ணிலாச் சமண ரோடே 

  இசைந்தனை ஏழை நெஞ்சே

தெண்ணிலா எறிக்குஞ் சென்னித் 

  திருவையா றமர்ந்த தேனைக்

கண்ணினாற் காணப் பெற்றுக் 

  கருதிற்றே முடிந்த வாறே.  8 

 

 

குருந்தம தொசித்த மாலுங் 

  குலமலர் மேவி னானுந்

திருந்துநற் றிருவ டியுந் 

  திருமுடி காண மாட்டார்

அருந்தவ முனிவ ரேத்துந் 

  திருவையா றமர்ந்த தேனைப்

பொருந்திநின் றுன்னு நெஞ்சே 

  பொய்வினை மாயு மன்றே.  9 

 

 

அறிவிலா அரக்க னோடி 

  அருவரை எடுக்க லுற்று

முறுகினான் முறுகக் கண்டு 

  மூதறி வாளன் நோக்கி

நிறுவினான் சிறுவி ரலால் 

  நெரிந்துபோய் நிலத்தில் வீழ

அறிவினால் அருள்கள் செய்தான் 

  திருவையா றமர்ந்த தேனே. 10

 

திருச்சிற்றம்பலம்