நான்காம்-திருமுறை

037 காலனை வீழச்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : நெய்த்தானம்

திருச்சிற்றம்பலம்

 

காலனை வீழச் செற்ற 

  கழலடி இரண்டும் வந்தென்

மேலவா யிருக்கப் பெற்றேன் 

  மேதகத் தோன்று கின்ற

கோலநெய்த் தான மென்னுங் 

  குளிர்பொழிற் கோயில் மேய

நீலம்வைத் தனைய கண்ட 

  நினைக்குமா நினைக்கின் றேனே.  1 

 

 

காமனை யன்று கண்ணாற் 

  கனலெரி யாக நோக்கித்

தூபமுந் தீபங் காட்டித் 

  தொழுமவர்க் கருள்கள் செய்து

சேமநெய்த் தான மென்னுஞ் 

  செறிபொழிற் கோயில் மேய

வாமனை நினைந்த நெஞ்சம் 

  வாழ்வுற நினைந்த வாறே.  2 

 

 

பிறைதரு சடையின் மேலே 

  பெய்புனற் கங்கை தன்னை

உறைதர வைத்த எங்கள் 

  உத்தமன் ஊழி யாய

நிறைதரு பொழில்கள் சூழ 

  நின்றநெய்த் தான மென்று

குறைதரும் அடிய வர்க்குக் 

  குழகனைக் கூட லாமே.  3 

 

 

வடிதரு மழுவொன் றேந்தி 

  வார்சடை மதியம் வைத்துப்

பொடிதரு மேனி மேலே 

  புரிதரு நூலர் போலும்

நெடிதரு பொழில்கள் சூழ 

  நின்றநெய்த் தானம் மேவி

அடிதரு கழல்கள் ஆர்ப்ப 

  ஆடுமெம் அண்ண லாரே.  4 

 

 

காடிட மாக நின்று 

  கனலெரி கையி லேந்திப்

பாடிய பூதஞ் சூழப் 

  பண்ணுடன் பலவுஞ் சொல்லி

ஆடிய கழலர் சீரார் 

  அந்தண்நெய்த் தானம் என்றுங்

கூடிய குழக னாரைக் 

  கூடுமா றறிகி லேனே.  5 

 

 

வானவர் வணங்கி யேத்தி 

  வைகலும் மலர்கள் தூவத்

தானவர்க் கருள்கள் செய்யும் 

  சங்கரன் செங்கண் ஏற்றன்

தேனமர் பொழில்கள் சூழத் 

  திகழுநெய்த் தானம் மேய

கூனிள மதியி னானைக் 

  கூடுமா றறிகி லேனே.  6 

 

 

காலதிற் கழல்க ளார்ப்பக் 

  கனலெரி கையில் வீசி

ஞாலமுங் குழிய நின்று 

  நட்டம தாடு கின்ற

மேலவர் முகடு தோய 

  விரிசடை திசைகள் பாய

மாலொரு பாக மாக 

  மகிழ்ந்தநெய்த் தான னாரே.  7 

 

 

பந்தித்த சடையின் மேலே 

  பாய்புன லதனை வைத்து

அந்திப்போ தனலு மாடி 

  அடிகள்ஐ யாறு புக்கார்

வந்திப்பார் வணங்கி நின்று 

  வாழ்த்துவார் வாயி னுள்ளார்

சிந்திப்பார் சிந்தை யுள்ளார் 

  திருந்துநெய்த் தான னாரே.  8 

 

 

சோதியாய்ச் சுடரு மானார் 

  சுண்ணவெண் சாந்து பூசி

ஓதிவா யுலகம் ஏத்த 

  உகந்துதாம் அருள்கள் செய்வார்

ஆதியாய் அந்த மானார் 

  யாவரும் இறைஞ்சி யேத்த

நீதியாய் நியம மாகி 

  நின்றநெய்த் தான னாரே.  9 

 

 

இலையுடைப் படைகை யேந்தும் 

  இலங்கையர் மன்னன் றன்னைத்

தலையுடன் அடர்த்து மீண்டே 

  தானவற் கருள்கள் செய்து

சிலையுடன் கணையைச் சேர்த்துத் 

  திரிபுரம் எரியச் செற்ற

நிலையுடை யடிகள் போலும் 

  நின்றநெய்த் தான னாரே. 10

 

 

திருச்சிற்றம்பலம்