நான்காம்-திருமுறை

031 பொள்ளத்த காய

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : கடவூர் வீரட்டம்

திருச்சிற்றம்பலம்

 

பொள்ளத்த காய மாயப்

  பொருளினைப் போக மாதர்

வெள்ளத்தைக் கழிக்க வேண்டில்

  விரும்புமின் விளக்குத் தூபம்

உள்ளத்த திரியொன் றேற்றி

  உணருமா றுணர வல்லார்

கள்ளத்தைக் கழிப்பர் போலுங்

  கடவூர்வீ ரட்ட னாரே.  1 

 

 

மண்ணிடைக் குரம்பை தன்னை 

  மதித்துநீர் மைய லெய்தில்

விண்ணிடைத் தரும ராசன் 

  வேண்டினால் விலக்கு வாரார்

பண்ணிடைச் சுவைகள் பாடி 

  ஆடிடும் பத்தர்க் கென்றுங்

கண்ணிடை மணியர் போலுங் 

  கடவூர்வீ ரட்ட னாரே.  2 

 

 

பொருத்திய குரம்பை தன்னுட் 

  பொய்நடை செலுத்து கின்றீர்

ஒருத்தனை யுணர மாட்டீர் 

  உள்ளத்திற் கொடுமை நீக்கீர்

வருத்தின களிறு தன்னை 

  வருத்துமா வருத்த வல்லார்

கருத்தினில் இருப்பர் போலுங் 

  கடவூர்வீ ரட்ட னாரே.  3 

 

 

பெரும்புலர் காலை மூழ்கிப் 

  பித்தற்குப் பத்த ராகி

அரும்பொடு மலர்கள் கொண்டாங் 

  கார்வத்தை யுள்ளே வைத்து

விரும்பிநல் விளக்குத் தூபம் 

  விதியினால் இடவல் லார்க்குக்

கரும்பினிற் கட்டி போல்வார் 

  கடவூர்வீ ரட்ட னாரே.  4 

 

 

தலக்கமே செய்து வாழ்ந்து 

  தக்கவா றொன்று மின்றி

விலக்குவா ரிலாமை யாலே 

  விளக்கதிற் கோழி போன்றேன்

மலக்குவார் மனத்தி னுள்ளே 

  காலனார் தமர்கள் வந்து

கலக்கநான் கலங்கு கின்றேன் 

  கடவூர்வீ ரட்ட னீரே.  5 

 

 

பழியுடை யாக்கை தன்னிற் 

  பாழுக்கே நீரி றைத்து

வழியிடை வாழ மாட்டேன் 

  மாயமுந் தெளிய கில்லேன்

அழிவுடைத் தாய வாழ்க்கை 

  ஐவரால் அலைக்கப் பட்டுக்

கழியிடைத் தோணி போன்றேன் 

  கடவூர்வீ ரட்ட னீரே.  6 

 

 

மாயத்தை அறிய மாட்டேன் 

  மையல்கொள் மனத்த னாகிப்

பேயொத்துக் கூகை யானேன் 

  பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ

நேயத்தால் நினைய மாட்டேன் 

  நீதனே நீசனேன் நான்

காயத்தைக் கழிக்க மாட்டேன் 

  கடவூர்வீ ரட்ட னீரே.  7 

 

 

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து 

  பாழுக்கே நீரி றைத்தேன்

உற்றலாற் கயவர் தேறா 

  ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்

எற்றுளேன் என்செய் கேன்நான் 

  இடும்பையால் ஞான மேதுங்

கற்றிலேன் களைகண் காணேன் 

  கடவூர்வீ ரட்ட னீரே.  8 

 

 

சேலின்நேர் அனைய கண்ணார் 

  திறம்விட்டுச் சிவனுக் கன்பாய்ப்

பாலுநற் றயிர்நெய் யோடு 

  பலபல ஆட்டி யென்றும்

மாலினைத் தவிர நின்ற 

  மார்க்கண்டற் காக வன்று

காலனை யுதைப்பர் போலுங் 

  கடவூர்வீ ரட்ட னாரே.  9 

 

 

முந்துரு இருவ ரோடு 

  மூவரு மாயி னாரும்

இந்திர னோடு தேவர் 

  இருடிகள் இன்பஞ் செய்ய

வந்திரு பதுகள் தோளால் 

  எடுத்தவன் வலியை வாட்டிக்

கந்திரு வங்கள் கேட்டார் 

  கடவூர்வீ ரட்ட னாரே. 10

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

அந்தணப் பெண்ணின் கொலையைக் கண்டுபிடித்தல்
View Details
இயற்பகை நாயனார்
View Details
உருத்திர பசுபதி நாயனார்
View Details